கே.பி. நேற்று வழங்கிய பேட்டி ஒன்றில், “யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாத காரணத்தால், புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசனுடன் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது என்று கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானதே?” என்ற கேள்விக்கு பதில் அளித்திருந்தார்.
அந்தப் பேட்டியில்தான், இந்த விஷயத்தை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
“நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. சில சமயங்களில் நான் நடேசன் ஊடாக பிரபாகரனுடன் தொடர்புகளை வைத்திருந்தது உண்மைதான். அவை அந்தந்த சூழ்நிலையைப் பொறுத்த விஷயம். யுத்தம் மிக உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் அது. இதனால், பிரபாகரனுடன் நீண்டநேரம் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. அப்படியான சந்தர்ப்பங்களில் நடேசன் மூலமாக தகவல்களை அனுப்பியிருக்கின்றேன்.
அதற்காக, பிரபாகரனுடன் நான் நேரடித் தொடர்பில் இருக்கவில்லை என்று அர்த்தமல்ல. யுத்தத்தின் இறுதிவரை அவருடன் நான் தொடர்பில் இருந்தேன். அதுதான் உண்மை” என்றும் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் இறுதி நாட்களில் நடந்தவற்றை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் சேனல்-4ல் வெளியான காட்சிகள் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் கூறிய பதில் ஆச்சரியமானது.
இந்தக் கேள்விக்கான பதில் என்ன தெரியுமா? கொழும்பில் இந்தப் பேட்டி பதிவு செய்யப்பட்ட அதே தினத்தில், புதுடில்லியில் இந்திய நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருப்பதும், இந்தப் பதிலும் கிட்டத்தட்ட ஒரே விஷயம்தான்.
“அது இப்போது முக்கியமல்ல. தற்போது அங்கிருக்கும் தமிழர்களுக்குத் தேவையான புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதே முக்கியம்”
தற்போது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில், ஸ்ரீலங்கா பற்றிய நிலைப்பாடும் இதுதான்! நன்றி விறுவிறுப்பு .காம்.