
யானைகள் அபார ஞாபக சக்தி உடையன என்று கூறுகின்றார்கள். ஆனால் எல்லோரையும் அசர வைக்கின்றது வெறும் மூன்று வயது உடைய சிறுவன் ஒருவரின் ஞாபக சக்தி. இவரது பெற்றோர் இந்தியாவில் கேரளா மாநிலத்தை சொந்த இடமாக கொண்ட மலையாளிகள். இக்குடும்பம் பிரித்தானியாவில் வாழ்கின்றது.
சிறுவன் ஆதார்ஷ் ஜோர்ஜ் இன்னமும் பாலர் பள்ளிக்கு கூட செல்லத் தொடங்கவில்லை. ஆனால் நாடுகளின் தலைவர்கள், பிரதமர்கள், எதிர்க் கட்சித் தலைவர்கள், தலைநகரங்கள் மற்றும் நாணயங்கள், ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் பெயர், சனத் தொகை கூடிய நாடுகள் போன்ற விபரங்களை மிகவும் சரியாக சொல்கின்றார்.
இவர் 300 வரை இலக்கங்களை ஒழுங்காக சொல்கின்றார். சுமார் 200 நாடுகளின் தலைநகரங்களை துல்லியமாக கூறுகின்றார்.
விபரங்களை தகப்பனிடம் இருந்து கேட்டு அறிவார். பின் நினைவில் எப்போதும் வைத்துக் கொள்வார்.
கணனியை திறம்பட பயன்படுத்துகின்றமையுடன் தேடுபொறிகளைப் பயன்படுத்தி பல தகவல்களையும் சொந்தமாகவே அறிந்து கொள்கின்றார். இவருக்கு புத்தகங்கள் செய்தித் தாள்கள் மீது அலாதிப் பிரியம். வைத்தியராக அல்லது விமானியாக வர வேண்டும் என்பது இவரின் ஆசை.
இவர் ஒரு பால மேதை என்று உலகப் பத்திரிகைகள் போற்றுகின்றன. ஆயினும் இவருக்கு எவ்விதம் அபார ஞாபக சக்தி கிடைக்கப் பெற்றது என்பது பெற்றோருக்குக்கூட தெரியாத இரகசியமாக உள்ளது.
