கோல்கட்டா: ஐ.பி.எல்., கோப்பை வென்ற கோல்கட்டா அணிக்கு மேற்கு வங்க அரசு நடத்திய பாராட்டு விழாவில் "அரசியல்' புகுந்து விளையாடியது. முதல்வர் மம்தா பானர்ஜி, சர்ச்சைக்குரிய பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டது பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்தது. போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாத நிலையில், லட்சம் பேர் ஈடன் கார்டன் மைதானத்தில் திரண்டதால் போலீசார் தடியடி நடத்த வேண்டிய படுமோசமான நிலைமை ஏற்பட்டது.
ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, முதன் முறையாக கோப்பை வென்றது. இந்த அணி வீரர்கள் கோல்கட்டா திரும்பினர். வெளிநாட்டு வீரர்கள் கோல்கட்டா செல்லவில்லை.
போக்குவரத்து பாதிப்பு:
நேற்று காலை 11.10 மணிக்கு, கோல்கட்டா அணி வீரர்கள், திறந்த பஸ்சில் ஹம்ஜா பகுதியில் இருந்து கோப்பையுடன் ஊர்வலமாக கிளம்பினர். இதில் பங்கேற்க, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் திரண்டதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மாநில அரசின் தலைமையகம் அமைந்துள்ள "தி ரைட்டர்ஸ் பில்டிங்' வந்த போது, முதல்வர் மம்தா பானர்ஜி, வீரர்களை வரவேற்றார். பின் அங்கிருந்து ஊர்வலம் ஈடன் கார்டன் மைதானத்தை அடைந்தது.
பரிதாப ரசிகர்கள்:
அனுமதி இலவசம் என்பதால், 67 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மைதானம் நிரம்பி வழிந்தது. இது தவிர, உள்ளே செல்ல முடியாமல் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கடும் வெயிலிலும், வெளியில் காத்திருந்தது பரிதாபமாக இருந்தது.
ஷாருக்கான் நடனம்:
மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் பாடல்கள் இசைக்கப்பட்டு நடன நிகழ்ச்சி நடந்தது. கோல்கட்டா அணி உரிமையாளரும் நடிகருமான ஷாருக்கான் தனது பங்கிற்கு குத்தாட்டம் போட, அரசு விழா தானா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
சர்ச்சை நடிகருடன்:
திடீரென, மம்தா பானர்ஜியின் தலையில் முத்தமிட்ட ஷாருக்கான்,, அவரையும், மாநில கவர்னர் நாராயணனையும் நடனமாட அழைத்தார். அவர்கள் முதலில் மறுத்தனர். ஆனால், பிடிவாதமாக இருவரது கைகளையும் பிடித்தவாறு நடனம் ஆடினார். இத்தொடரில் மைதானத்தில் புகை பிடித்தல், போதையில் மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் மோதலில் ஈடுபட்ட ஷாருக் கானுடன் சேர்ந்து மம்தா ஆடியது புதிய சர்ச்சைக்கு வழிவகுத்தது.
அடுத்தடுத்து உத்தரவு:
பின் "மைக்' பிடித்த மம்தா, வீரர்கள் மட்டும் தான் மைதானத்தை சுற்றி வர வேண்டும், மியூசிக் இசைக்க வேண்டாம் என மாறி, மாறி உத்தரவுகளை போட்டுக் கொண்டே இருந்தார். மாநில அரசு சார்பில் வீரர்களுக்கு, பொன்னாடை போர்த்தி, தங்கச் சங்கிலி அணிவித்தார்.
போலீஸ் தடியடி:
இதனிடையே வெளியில் காத்திருந்த ரசிகர்கள், அங்கிருந்த தடுப்புகளை தாண்டி, உள்ளே செல்ல முற்பட்டனர். இதற்கு போலீசார் மறுத்தனர். இதனால் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசாருடன் மோதல் ஏற்பட, தடியடி நடத்தப்பட்டது. வெறுப்படைந்த ரசிகர்கள் தடுப்புகளை உடைத்து எறிந்தனர்.
குழந்தைகள் கண்ணீர்:
இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். மைதானத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான கிழிந்த "ஷூக்களும்', செருப்புகளும் சிதறி கிடந்தன. பெற்றோரை விட்டுப் பிரிந்த குழந்தைகள், ஆங்காங்கே கண்ணீருடன் கதறினர். மொத்தத்தில் அரசியல் ஆதாயம் தேட பாராட்டு விழாவை மம்தா முழுமையாக பயன்படுத்திக் கொண்டார்.
கங்குலியை காணவில்லை
வெற்றி விழாவில் "கோல்கட்டா தாதா' கங்குலி பங்கேற்கவில்லை. நேற்று திடீரென, குடும்பத்துடன் லண்டன் கிளம்பி சென்று விட்டார். இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட பயணம் என, அவரது அலுவலத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
எதிர் பார்க்கவில்லை
தடியடி குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,"" விழாவுக்கு இந்தளவுக்கு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்நிகழ்ச்சியே கடைசி நிமிடத்தில் தான் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் தான் முழு அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை,'' என்றார்.
லாலுவை மிஞ்சிய செயல்
சமீப காலமாக மம்தா "ஆட்டம்' அதிகமாக உள்ளது. பள்ளி பாடத்தில் மாற்றம், கம்யூனிஸ்ட்கள் வீட்டில் திருமணம் செய்ய வேண்டாம் என்ற உத்தரவு, தன்னைப்பற்றிய கார்ட்டூன் வெளியிட்டவரை கைது செய்தது என நிறைய சர்ச்சையில் சிக்கி தவிக்கிறார். இந்த எதிர்ப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ள, இப்போது கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளார்.
கோல்கட்டா அணி ஏதோ உலக கோப்பை வென்றுவிட்டதைப் போல, அரசு சார்பில் பாராட்டு விழா நடத்துகிறார். ஏற்கனவே மாநில நிதிநிலை மோசமாக உள்ள நிலையில் இது தேவை தானா. இவரது செயலுக்கு இணையதளத்தில் பலர் தங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஒருவர் "டுவிட்டரில்' கூறுகையில்,"" மம்தா பானர்ஜியின் செயல்கள், 1990 களில் பீகாரில் லாலூ பிரசாத் செய்த கோமாளித்தனம் போல உள்ளது,'' என குறிப்பிட்டுள்ளார்.
இருவர் மட்டுமே வங்காளி
ஐ.பி.எல்., கோப்பையை கோல்கட்டா அணி, வென்றதை கொண்டாடிய முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு விஷயத்தை மறந்து விட்டார். பைனலில் விளையாடிய 11 பேரில் மனோஜ் திவாரி, லட்சுமி ரத்தன் சுக்லா மட்டுமே மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள். கேப்டன் காம்பிர்(டில்லி), பிஸ்லா(அரியானா), காலிஸ்(தென் ஆப்ரிக்கா), யூசுப் பதான்(குஜராத்), சாகிப் அல் ஹசன்(வங்கதேசம்), ரஜத் பாட்யா(டில்லி), அப்துல்லா(உ.பி.,), நரைன்(வெ.இண்டீஸ்), பிரட் லீ(ஆஸி.,) ஆகிய மற்ற 9 வீரர்கள் கோல்கட்டாவுக்கு தொடர்பு இல்லாதவர்கள்.
தவறான முன்னுதாரணம்
ஐ.பி.எல்., என்பது பி.சி.சி.ஐ., என்ற தனியார் அமைப்பு நடத்தும் போட்டி. இதில் மாநிலத்துக்கு எவ்வித தொடர்பும் இல்லை. இதற்கு முன் ராஜஸ்தான், சென்னை அணிகள் கோப்பை வென்ற போது, இது போன்று ஆடம்பர விழா நடத்தப்படவில்லை. தற்போது மம்தா தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டார்.