விஷால், ஷமீரா ரெட்டி, விவேக் மற்றும் பலர் நடிக்க பிரபுதேவா இயக்கி இருக்கும் படம் ‘வெடி’. விக்ரம் கிருஷ்ணா தயாரித்து இருக்கிறார். விஜய் ஆண்டனி இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் செப்-3-ம் தேதி நடைபெற்றது.
அவ்விழாவில் பிரபுதேவா, விஷால், ஷமீரா ரெட்டி, விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அவ்விழாவில் பிரபலங்கள் பேசியவை :
பிரபுதேவா : “செளரியம் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் தான் ‘வெடி’. பாலா இயக்கத்தில் ‘அவன் இவன்’ படத்தில் நடித்ததாலோ என்னவோ ‘வெடி’ யில் முதல் படத்தில் நடிப்பது போல் நடித்து இருக்கிறார் விஷால். அவ்வளவு சின்சியர் நடிகர் அவர்.
விஜய் ஆண்டனி இசையமைத்து கொடுத்த டியூனை பலவற்றை நான் வேண்டாம் என்று கூறி இருக்கிறேன். ஆனால் அதற்கு எல்லாம் கோபப்படாமல் அடுத்த டியூனை போட்டு அனுப்பி வைத்துவிட்டு “இப்போ கேளுங்கள் சார்” என்பார்.
இந்த படத்தின் பாடல்கள் எனக்கு திருப்திகரமாக அமைந்து இருக்கிறது. கண்டிப்பாக ‘வெடி’ அனைத்து வித மக்களையும் கவரும் படமாக அமையும் ”
விஜய் ஆண்டனி : ” இந்த படத்தில் 3 மெலடி பாடல்கள், 2 குத்து பாடல்கள் இருக்கின்றன. இளைய தளபதி படத்திற்கு இசையமைத்து விட்டு புரட்சி தளபதி படத்திற்கு இசையமைத்து இருக்கிறேன்.
விஷால் என்னுடைய லயோலா கல்லூரி நண்பர். நான் அப்போதே அவரிடம் நிறைய பாடல்களை பாடிக் காட்டி இருக்கிறேன். 3 வருடங்கள் கழித்து அவரை ஒரு நடிகராக பார்த்த போது கூட, அவர் கல்லூரி நாட்களில் நான் போட்ட டியூன்களை எல்லாம் பாடி காட்டினார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
படத்தின் பாடல்கள் மட்டுமல்லாமல் படமும் பிரமாதமாக வந்து இருக்கிறது.”
விஷால் :” செளரியம் என்ற தெலுங்கு படத்தினை பார்த்து அதன் ரீமேக் உரிமை வாங்கி, 2 வருடங்கள் கழித்து நடித்து இருக்கிறேன். தெலுங்கு படத்தின் தழுவல் மட்டுமே இது. தமிழ் திரையுலகிற்கு ஏற்றவாறு நிறைய மாற்றி இருக்கிறோம்.
படத்தை யாரை இயக்க சொல்லாம் என்று யோசித்த போது எனக்கு தோன்றியது பிரபுதேவா சார் பெயர் மட்டுமே. அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.
படம் ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடித்ததும் தெரியவில்லை உடனே முடித்து விட்டார். முதலில் இருந்தே சரியாக அனைத்தையும் தயார் செய்து வைத்து இருந்தார். ஒரு நாள் வந்து ‘சார் நீங்க நடிக்க காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டன. பாடல்கள் மற்றும் சண்டைக்காட்சிகள் மட்டும் தான் பாக்கி இருக்கிறது’ என்று கூறினார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
எனக்கு அவரது நடன இயக்கத்தில் ஆட வேண்டும் என்று ஆசை. ஆனால் எனக்கு இந்த படத்தில் அந்த வாய்ப்பு அமையவில்லை. படத்தில் நடனம் கூட என்னை ஆடவிடவில்லை. பிரபாகரன் என்ற பாத்திரம் ரொம்ப டான்ஸ் ஆட கூடாது என்று கூறி விட்டார். கடைசி பாடல் மட்டும் தான் கொஞ்சம் ஆட வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.
படத்தின் பாடல்கள் நாளை செப் 4ம் தேதி வெளிவர இருக்கிறது. படம் இம்மாதம் இறுதியில் வெளியிட முடிவு செய்து இருக்கிறோம். தற்போது ‘தீராத விளையாட்டு பிள்ளை’ இயக்குனர் திரு இயக்கத்தில் நடித்து வருகிறேன்.
நான் இதுவரை நடித்த படங்களில், ஹீரோயினுக்கும் எனக்குமான காட்சிகளில் உயரப் பிரச்னை இருந்தது. ஒன்று நான் என்னை குழி வெட்டி கீழே இறக்கி விடுவார்கள். இல்லையென்றால் நாயகிக்கு ஒரு ஆப்பிள் பெட்டி போடுவார்கள். முதல் முறையாக எனக்கு நிகரான உயரம் உடையவரான ஷமீரா ரெட்டியை நாயகி ஆக்கி இருக்கிறார்கள்.
கல்யாணம் பற்றி கேட்கிறார்கள். என்னை பொறுத்தவரை இப்போது ‘வெடி’ படத்தினை பற்றிய சிந்தனையே அதிகமாக இருக்கிறது, கல்யாணத்தை பற்றி சிந்திக்கவில்லை ” என்று கூறினார்.
நாயகி ஷமீரா ரெட்டி பேசும் போது ” எனக்கு இந்தி திரையுலகத்தை விட தமிழ் திரையுலகமே அதிகம் பிடித்து இருக்கிறது. காரணம் தமிழ் படம் என்பது உடனே முடிந்து விடும், இந்தி படம் அப்படி அல்ல.
‘வாரணம் ஆயிரம்’ படத்தின் மூலம் அறிமுகமான என்னை இன்னும் தமிழ் ரசிகர்கள் மறக்கவில்லை. ஆனால் இந்தி ரசிகர்கள் அப்படி அல்ல அவர்கள் உடனே மறந்து விடுவார்கள்.
பிரபுதேவா சார் எனக்கு ஒரு நாள் போன் செய்து ‘ இந்த படத்தில் நடிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது’ என்று கூறினார். நான் உடனே கதை என்ன? நாயகன் யார்? என்பது போன்ற எதையும் நான் கேட்கவில்லை. உடனே நடிக்க சம்மதித்து விட்டேன். படமும் நன்றாக வந்து இருக்கிறது”