தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை தவறான செயல்களுக்கு பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை சமீபத்தில் நடத்தப்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது பார்த்தோம். ஆனால் அதே தொழில்நுட்பம் சரியானவர்களின் கைகளில் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு சம்பவம்.
சொந்த பாட்டியாலேயே கடத்திச் செல்லப்பட்ட ஒரு பெண்ணை கூகுல் இணையதள சேவையின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்கப் போலீசார்.
நடாலி மால்டாய்ஸ் என்ற சிறுமியை அவளது பாட்டி ரோஸ் மால்டாஸ் கடந்த சில தினங்களுக்கு முன் அவளது பெற்றோரிடம் இருந்து கடத்திச் சென்று விட்டார். ரகசியமாக ஓரிடத்தில் மறைத்து வைத்து பெற்றோரிடம் சிறுமியை ஒப்படைக்க பாட்டி மறுத்துவிட்டாள்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் உள்ள மசாஷூசட்ஸ் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. சிறுமியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போலீசார், அந்த சிறுமி பயன்படுத்திய செல்போனில் உள்ள குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (ஜிபிஎஸ்) வசதியைக் கொண்டு அந்த சிறுமியின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
அதோல் என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அந்த சிறுமி மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்த போலுசிக்ர் பின்னர் கூகுல் இணையதளத்தில் உள்ள கூகுல் ஸ்ட்ரீட் வியூ என்ற வசதியைக் கொண்டு அந்த ஓட்டல் எங்கு உள்ளது என்பதையும் கண்டுபிடித்து, படையுடன் சென்று அந்த சிறுமியை மீட்டுள்ளனர்.
அமெரிக்காவில் செல்போன் பயன்படுத்துபவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கும் ஜிபிஎஸ் வசதி உள்ளது. 67 சதவிகித செல்போன் பயன்பாட்டாளர்களை 100 மீட்டர் சுற்றளவுக்குள்ளும், 95 சதவிகிதம் பேரை 300 மீட்டர் சுற்றளவுக்குள்ளும் கண்டுபிடித்து விட முடியும் என்கின்றனர் நடாலியை கண்டுபிடித்த போலீசார்.
அதோல் போலீசாரின் இந்த முயற்சிக்கு தீயணைப்புத் துறையை சேர்ந்த தாமஸ் லோசியர் என்பவர் உதவி புரிந்திருக்கிறார். இவர் ஏற்கெனவே இதே முறையை பயன்படுத்தி தீவிபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றவும், தீயை அணைக்கவும் முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது காணாமல் போய்விட்டால் கூட கூகுல் மற்றும் ஜிபிஎஸ் உதவியுடன் அவர்களை கண்டுபிடித்து விடலாம். கவலை வேண்டாம்.
(நன்றி -நிகழ்வுகள்.கொம் )