ஜூலை 27 குமுதத்தில் வந்திருக்கும் பேட்டி ஒன்றில் -
டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் பலரின் தூக்கத்தைக் கெடுத்தவர் முத்தையா முரளிதரன். ஆனால் இன்று அவர் தூக்கத்தையே ஒருவர் கெடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் ஹர்பஜன் சிங்.
ஹர்பஜன் சிங்கைப் பார்த்து முரளிதரன் பயப்படுவதற்குக் காரணம் சாதனை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர் என்ற முரளிதரனின் சாதனையை ஒருவர் வீழ்த்த முடியும் என்றால் அது ஹர்பஜன் சிங்காகத் தான் இருக்க முடியும்.
தனது 96 வது டெஸ்ட் போட்டியிலேயே 404 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருக்கிறார் . இது இப்படியே தொடர்ந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை நிச்சயம் முரளிதரனிடம் இருந்து இவர் தட்டிப் பறிப்பார்.
கூக்லி, தூஸ்ரா என்று சுழற்பந்து வீச்சில் உள்ள வகைகளில் புதிதாக 'தீஸ்ரா' என்ற வகையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறாராம் ஹர்பஜன் சிங்.
ஸ்பின் பவுலிங்கில் பவுன்சர் வீசும் முறைதான் தீஸ்ரா.
இந்த 'தீஸ்ரா' முரளிதரனின் சாதனையை பாஜி முறியடிக்க ஆயுதமாக இருக்கும் என்று நம்புவோம்.
டால்மேன்
---------------------------------------------------------------
என்னைப் பொறுத்தவரை ஹர்பஜன் ஐந்நூறு என்ற இலக்கை அடையவே தவழவேண்டியிருக்கும்.. அதன் பின் சக இந்திய சுழல் பந்துவீச்சாளர்அணில் கும்ப்ளேயின் சாதனை.. அதற்கே வாய்ப்புக்கள் குறைவு.. இதற்குள் முரளியின் 800..
எதோ பழமொழி சொல்வார்களே.. கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன்.... அப்படி இருக்கு இந்த குமுதம் விஷயம்..
சுழல் பந்துவீச்சாளர்கள் பொதுவாக முப்பது வயதைத் தாண்டிய பின்னரேயே முதிர்ச்சியும் பக்குவமும் அடைவது வழமை.. அண்மைக்கால சுழல்பந்து மன்னர்களான முரளிதரன், வோர்ன், கும்ப்ளேஎன்று அனைவருமே தம் முப்பது வயதுக்கு பிறகு விக்கெட்டுக்களை மளமளவென எடுத்தோர் தான்.
ஆனால் அவர்கள் ஹர்பஜனின் இப்போதைய நிலைபோல எந்தவொரு கட்டத்திலும் அணியில் இடம் பறிபோகும் அபாயத்தில் இருக்கவில்லை.
அடுத்து இப்போது ஹர்பஜன் சிங் எடுத்த விக்கெட்டுக்களில் பாதியளவைக் கூட எடுத்திராத இங்கிலாந்தின் கிரேம் ஸ்வானைத் தற்போது விளையாடும் சிறந்த சுழல் பந்து வீச்சாளராக விமர்சகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள்.
ஹர்பஜன் சிங்கின் பெறுபேறுகளைப் பார்த்தால் அதுவும் நியாயம் என்றே தோன்றும்..
சிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆபிரிக்கா ஆகிய அணிகள் தவிர வேறு எந்த அணிகளுக்கு எதிராகவும் இவரது டெஸ்ட் பந்துவீச்சு சோபிக்கவில்லை..
முன்பு ஆஸ்திரேலியாவின் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் அண்மைக்காலத்தில் அவர்களுடனும் திணறுகிறார்.
இந்தியா மற்றும் மிகப் பலவீன அணிகளான நியூ சீலாந்து, சிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் தவிர பாஜ்ஜியின் பாச்சா வேறு எந்த நாட்டு ஆடுகளங்களிலும் பலிக்கவில்லை.
பாகிஸ்தானில் வீசிய 486 பந்துகளில் விக்கெட்டுக்கள் இல்லை.
இலங்கை, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஹர்பஜனின் பந்துவீச்சு சராசரி 45க்கும் மேல்..
அதற்குள் அன்றூ சைமண்ட்ஸ் 'குரங்கு' சர்ச்சை, ஸ்ரீசாந்த கன்னத்தில் அறை சர்ச்சை, அண்மைய விஜய் மல்லையா + தோனி விளம்பர சர்ச்சை என்று இனியும் மாட்டிக் கொண்டால் இன்னும் விளையாடும் ஆயுள் குறையலாம்..
இப்போதைக்கு விளையாடும் எவராலும் எட்ட முடியாத விக்கெட் உலக சாதனையை ஹர்பஜன் தான் எட்டக் கூடியவர் என்று ஒரு மாயையை சில இந்திய ஊடகங்கள் ஏற்படுத்தக் காரணமும் முரளிதரன்..
முரளிதரன் எவ்வளவுக்கெவ்வளவு மிகச் சிறந்த கிரிக்கெட் வீரரோ, எவ்வளவுக்கெவ்வளவு இரக்க குணம் படைத்த மனிதரோ, அவற்றை விட அதிகமான ஓட்டை வாயுடையவர்.
இவர் வாயை சும்மா கிளறினாலே ஸ்கூப் செய்திகள் பலருக்கும் கிடைத்துவிடும்..
கழக மட்டத்தில் விளையாடும் நேரம் முதல் இலங்கைத் தேசிய அணியில் இடம் கிடைத்து நீண்ட காலம் ஒரு ஊமை போலவே மிக அமைதியாக இருந்ததாலோ என்னவோ, டரேல் ஹெயார் சர்ச்சைக்குப் பிறகு பேட்டிகள் கிடைக்கும் போதெல்லாம் வெளுத்துவாங்கிப் பக்கங்களையும் வம்பு கேட்கும் காதுகளையும் நிரப்ப ஆரம்பித்தார்.
அவற்றுள் பல அந்தந்தக் காலகட்ட தலைப்புச் செய்திகளாகவும் மாறிப் போயின..
முரளியின் சில பிரபல உளறல்கள்.. அல்லது உணர்ச்சிவசப்பட்ட கூற்றுக்கள்..
கடந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டில் கூடுதலாக வெட்டியாகப் பொழுதைக் கழித்தவேளையில் கையில் கிடைத்த நாளேடுகள், சஞ்சிகைகள் எல்லாவற்றையும் வாசித்துத் தீர்த்தேன்..
அதில் குமுதம் கொஞ்சம் விசேடம்...
அதிலே இருந்த ஹர்பஜன் சிங்கின் பேட்டி ஒன்று தான் மேலே தந்திருப்பது..
அடப் பாவிப் பயலே.. இப்படியும் ஒரு கணிப்பா?
எப்போது அணியிலிருந்து தூக்கப்படுவார் என்று இருக்கும் ஒரு சப்பை பந்துவீச்சாளருக்கு இப்படியொரு சப்பறமா? (இலங்கைக் கோயில்களில் சாமிகள் பயணிக்கும் அலங்கார வாகனம்)
இங்கிலாந்து தொடரை ஒரு தடவை தானும் பார்க்காதவராக இருந்திருப்பாரோ இதை எழுதிய டால்மேன்?
ஹர்பஜன் - சுழல் பந்துவீச்சாளர் என்று சேர்த்து எழுதினால் தான் இவர் சுழல் பந்து தான் வீசுகிறார் என்று இப்போது சொல்ல முடிகிறது.
இந்திய அணிக்குள் நுழைந்தால் இவரை ஓரம் கட்டிவிடக் கூடியதாக மூன்று திறமையான சுழல்பந்து வீச்சாளர்கள் எப்போது வாய்ப்பு எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்..
அஷ்வின், மிஸ்ரா, ஓஜா..
அடுத்த தொடர்களே நிச்சயமில்லாத முப்பது பராயம் தாண்டிய ஒரு பந்துவீச்சாளர் இன்னும் நானூறு விக்கெட்டுக்களை எடுப்பதா?
கடைசி மூன்று வருடங்களில் 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்த பாஜி, கைப்பற்றியுள்ள விக்கெட்டுக்கள் 92. அதிலும் சராசரி 36.80.
இப்போதைய தரவுகளை வைத்துப் பார்த்தால் முரளியின் சாதனையை உடைக்க ஹர்பஜன் இன்னும் இதேயளவு டெஸ்ட் போட்டிகளை விளையாட வேண்டும்..
அதற்கு எட்டு வருடங்களாவது வேண்டும்.. முடிகிற காரியமா?
ஹர்பஜனின் தரவுகள்.....
Mat | Inns | Balls | Runs | Wkts | BBI | BBM | Ave | Econ | SR | 4w | 5w | 10 | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Tests | 98 | 180 | 27651 | 13084 | 406 | 8/84 | 15/217 | 32.22 | 2.83 | 68.1 | 16 | 25 | 5 |
year 2009 | 6 | 10 | 306.0 | 47 | 875 | 29 | 6/63 | 7/102 | 30.17 | 2.85 | 63.3 | 1 | 0 | ||
year 2010 | 12 | 21 | 612.0 | 103 | 1750 | 43 | 5/59 | 8/123 | 40.69 | 2.85 | 85.3 | 1 | 0 | ||
year 2011 | 6 | 12 | 259.4 | 43 | 761 | 20 | 7/120 | 7/195 | 38.05 | 2.93 | 77.9 | 1 | 0 |
விரிவாக அலசி ஆராய்வதற்கு.. இந்தப் பதிவை வாசித்த பின் கீழ்க்காணும் சுட்டியை சொடுக்குங்கள்..
I am not a captaincy material - ஆஸ்திரேலியாவில் வைத்து வழங்கிய பேட்டி ஒன்றில்..
அடுத்து தலைமைப் பதவி வழங்கப்படலாம் என்றிருந்த நிலையில் இவரது பேட்டியும் அதற்கு மேலதிகாம தனக்குப் பொறுப்பு சுமக்க விருப்பமில்லை என்ற முரளியின் 'மனம் திறந்த' அறிக்கையும் வந்தது.
இதே போல மிகுந்த தன்னடக்கத்துடன் ஷேன் வோர்ன் தன்னை விடவும் சிறந்த ஸ்பின்னர் என்று முரளி சொன்னதும் உண்டு.
இதே போலத் தான் தான் ஓய்வு பெற்ற பின் கொடுத்த பேட்டியிலும் சும்மா இருக்க முடியாமல் "எனது சாதனையை உடைக்கக் கூடியவர் ஹர்பஜன் சிங் தான்" என்று கூறிவிட்டார்.
வேறு யாரும் கண்ணுக்கெட்டிய தொலைவில் தெரியாததால் கிட்ட இருந்த (நாடுகளின் தூரத்தை நான் சொல்லவில்லை) சிங்கை சொல்லிவிட்டாரோ?
இது தான் இந்திய ஊடகங்கள் அடுத்த என்று ஹர்பஜனை உசுப்பேற்ற காரணம்..
ஆனால் முரளிதரனின் அண்மைய இரு ஊடகப் பேட்டிகள் கிளப்பிய பரபரப்பும் அனைவரும் அறிந்ததே..
இலங்கை கிரிக்கெட் வீரர்களை IPL 2011 இல் விளையாட விடச் சொல்லி..
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இலங்கைக்கான சுற்றுலாவுக்கு செல்லக் கூடாது என்று எதிர்ப்பு அங்கு வாழும் தமிழரால் எழுப்பப்பட்ட போது பேசாமல் இருந்திருக்கலாம்.. தேவையற்று கருத்து சொல்லப் போய் கடும் எதிர்ப்பை வாங்கிக் கட்டிக் கொண்டார்.
முரளிக்கும் பேட்டிகளுக்குமான சர்ச்சை தொடர்கிறது..
இதனால் இவர் சத்தமில்லாமல் செய்கின்ற பல நல்ல காரியங்களும் தெரியாமலேயே போய்விடுகின்றன..
ஆனால் ஒரேயொரு காரியத்தை இவர் செய்யாமல் விட்டதற்குப் பாராட்ட விரும்புகிறேன்..
கிளிநொச்சியில் அண்மையில் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு மைதானத்தைத் திறந்து தமிழ் மக்களுக்கு அன்பளிப்பு செய்தாரே.. (இந்தியப் பின்னணிப் பாடகர்கள் இசை நிகழ்ச்சிக்காக வந்து விமான நிலையத்துடன் திரும்பிப் போனதும் இதே மைதானத் திறப்பு விழாவுடன் நடக்க இருந்த பிரசாரக் கூட்டத்துக்குத் தான்)
அந்த மைதானத்துக்கான அதிக செலவைப் பொறுப்பேற்றவர் முரளி. ஆனாலும் அரசியல்மயப்படுத்தப்பட்ட விழாவை முரளி தவிர்த்ததற்கே இந்தப் பாராட்டுக்கள்....
இன்னோர் விஷயம்.. தீஸ்ரா...
இது ஏதோ ஹர்பஜன் கண்டுபிடித்த புதுவித அணுகுண்டு, ஐதரசன் குண்டு என்று குமுதம் கட்டிவிட்ட கதையும் ஆகாசப் புழுகு....
ஏற்கெனவே தீஸ்ரா வந்தாச்சு...
முரளிதரன், ஸ்வான், இலங்கையின் சுராஜ் ரண்டிவ், ஏன் இந்தியாவின் இளைய நட்சத்திரம் அஷ்வினும் கூட இந்த தீஸ்ராவைப் பயன்படுத்துகிறார்கள்..
ஹர்பஜன் பயன்படுத்தியதாக நான் பார்த்ததும் இல்லை;அறிந்ததுமில்லை.
ஆனால் இந்து சுழல் பந்துவீசும் பவுன்சர் என்று குறிப்பிட்டது தவறு..
நேராக சென்று திடீரென அதிக கோணத்தில் திரும்பும் பந்து இது.
அதிகமாகப் பாவனையில் இல்லாததால் பலரும் இதுபற்றி அறிந்திலர்.
ஆனாலும் ஹர்பஜன் சிங் முரளியின் உலக சாதனையை முறியடிப்பார் என்பது.... ஹா ஹா ஹா..
அண்ணே குமுதம் டால்மேன் அண்ணே.. சும்மா ஜோக் அடிக்காதீங்க...
(ஒரு தடவைக்கு நான்கு தடவை இது நகைச்சுவை/கற்பனைப் பேட்டியா என்றும் பார்த்துவிட்டேன்)
யாராவது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் பந்துவீசி பார்த்தீங்க?
பேசாமல் அடுத்த போட்டியில் சேவாக்(விளையாடினால்), ரெய்னா, யுவராஜ் ஆகியோரின் சுழலை நம்பி இறங்கலாம்..
ஒன்றிரண்டு விக்கேட்டுக்களாவது விழும்....THANKS-LOSHAN in kalam