சீமான் என்ற பெயரைக் கேட்டாலே நரம்புகள் முறுக்கேறும் என்ற நிலை சில மாதங்களுக்கு முன்வரை இருந்தது. அரசியலில் அவரே மாற்று சக்தியாக வருவார் என்று பலரும் கனவு கண்டனர். நமது தேர்தல் ஸ்பெஷல் தொடரில் எழுதிய சீமானும் சீமானும் தாத்தாக்களும் பதிவில் சீமானைப் பற்றிய சில அடிப்படைக் கேள்விகளை நாம் முன்வைத்தோம். பிறகு சில நாட்கள் கழித்து கவிஞர் தாமரையும் இதே போன்ற கேள்விகளை சீமானிடம் அறிக்கை வாயிலாக எழுப்பினார். ‘இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது’ என்று திருவாய் மலர்ந்துவிட்டு தேர்தல் பணியில் தீவிரமாய் இறங்கினார் சீமான்.
பொதுவாக தமிழிண உணர்வாளர்கள் மீது எனக்கு சாஃப்ட் கார்னர் உண்டு. ஆனாலும் எதனாலோ சீமானை முழுக்க நம்ப மனம் ஒப்பவில்லை. தமிழின் முக்கிய இயக்குநராக தம்பி என்ற ஒரே ஒரு படத்தின் மூலம் தன் முத்திரையை பதித்த சீமான், திடீரென்று நடிகர் அவதாரம் எடுத்தபோதே இவர் தீவிர அரசியலுக்கு திட்டமிடுகிறார் என்பது புரிந்தது. பலநாட்கள் உணர்ச்சி வேகத்தில் பொங்கிப் பொங்கி கட்டியமைத்த புரட்சிவாதி பிம்பத்தில் இப்போது கீறல் விழுந்திருக்கின்றது.
நடிகை விஜயலட்சுமி சீமான் மீது முதலில் புகார் கொடுத்தபோது, யாருமே அது பற்றிப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. காரணம் இதே விஜயலட்சுமி ஏற்கனவே இதே புகாரை ஒரு கன்னட நடிகர் மீதும் டிவி நிகழ்ச்சி இயக்குநர் மீதும் சுமத்தி இருந்தது தான். ஏதோவொரு வேகத்தில் நடிக்க வந்துவிட்டு, பின் நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள போராடும் நடவடிக்கையா அல்லது மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையா என்று புரியாத விவகாரங்கள் தான் அவை. புலி வருது கதையாக இவர் சீமான் மீது புகார் சொன்னபோது யாரும் விஜயலட்சுமியை நம்பவில்லை.
குற்றம் சுமத்துபவர் தவறான நபர் என்பதால் குற்றம் சுமத்தப்பட்டவர் நல்லவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குற்றம் சுமத்தப்பட்டவர் சில விஷயங்களில் நல்லவர் என்பதால் எல்லா விஷயத்திலும் அவர் நல்லவராக இருக்க வேண்டியதில்லை.
விஜயலட்சுமியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து சீமானின் நடவடிக்கைகள் தான் நம் சந்தேகத்தை மேலும் வலுவாக்குகின்றன. ஜெ.ஆட்சிப்பொறுப்பேற்றதும் ஜெ. ’ராஜ பக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றினார். நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயமே இது. இதனை ஒரு அறிக்கை விட்டுப் பாராட்டி இருந்தாலும் போதும். ஆனால் செந்தமிழன் சீமான் உடனே பாராட்டு விழாவினை அறிவித்தார். இதில் கேவலமான விஷயம் என்ன வென்றால் யாருக்காக அந்தப் பாராட்டு விழா நடத்தினாரோ அந்த ஜெயலலிதா இதில் கலந்து கொள்ளவில்லை என்பது தான்.
ஆனாலும் அண்ணன் சீமான் அசராமல் பாராட்டு விழா நடத்தினார். அதில் அவர் பேசிய அனல் பறக்கும் பேச்சின் ஒரு பகுதி இது: “துணிச்சல் மிக்க பெண்மணி அவர். இதற்காக நன்றி என்ற வார்த்தையோடு நாம் நிறுத்திக் கொள்ளக்கூடாது. புரட்சித் தலைவி என்ற பட்டத்துக்கு அவர் பொறுத்தமானர். அவரை புரட்சித் தலைவி என்று அழைப்பதற்காக தமிழர்களாகிய நாம் பெறுமைப்பட வேண்டும்.” நிச்சயம் இவரது பேச்சைக் கேட்டு தனக்குப் போட்டியாய் ஒருவரா என்று ஓ.பன்னீர்செல்வம் பயந்து போயிருப்பார் என்பது நிச்சயம்.
‘ஒரு நல்ல தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி’ என்று ஒரு பக்க அறிக்கையுடன் முடிக்க வேண்டிய விஷயத்தை இவ்வளவு பெரிய அளவில் சீமான் செய்தது ஏன்? ’புரட்சித் தலைவியின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்த என் தம்பிமார்கள் அனைவரும் அணி திரள வேண்டும்.’ என்று அவர் பேசியதைக் கேட்டபோது இவரை நம்பிக் கூடிய அந்த தம்பிமார்கள் மீது பரிதாபமே மிஞ்சியது. தன்னுடைய தனிப்பட்ட பிரச்சினையில் இருந்து தப்ப தன்னை நம்பி வந்த தம்பிமாரை அடகு வைக்கின்றாரா சீமான் என்பதே இப்போது எழும் சந்தேகம்.
அதனைத் தொடர்ந்து விஜயலட்சுமி ‘மதுரையில் சீமான் நிபந்தனை ஜாமீனில் இருந்தபோது 15 நாட்கள் அவருடன் இருந்தேன். இதை போலீஸார் விசாரித்தாலே தெரிந்து கொள்ளலாம். இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பவே ஜெ.வுக்கு பாராட்டு விழா நடத்தினார்’ என்று குற்றம் சுமத்தினார். அவரது வாதம் முழுக்க புறக்கணிக்கத் தக்கதாக இல்லை. காவல்துறை அந்த வழக்கை தீவிரப்படுத்தினால் பல உண்மைகள் வெளிவரும்.
தமிழினத்தின் விடியலுக்காகவே பிறந்து வந்த சீமான் ‘சம்ச்சீர்க் கல்வி விஷயத்தில் அதிமுக அரசு சரியாகச் செயல்படுகிறது’ என்று பாராட்டினார். பாராட்டிய இரண்டு நாளில் உயர்நீதிமன்றத்தின் செருப்படி விழுந்தது. தொடர்ந்து உச்சநீதி மன்றமும் செருப்பால் அடித்தது. அதன்பிறகு ’பாராட்டு விழா நடத்தியும் திருப்தி பெறாத சீமான் மீண்டும் ஜெ.வை நேரில் சந்தித்து அதே விஷயத்திற்கு ’நன்றி’ சொல்லிவிட்டு விட்டு வந்திருக்கிறார்.
இப்போது அனைவரின் எதிர்பார்ப்பும் ஜெ.எப்படி இந்த விஷயத்தை முன்னெடுக்கப்போகிறார் என்பதே. தனக்கு நிகராக யாராவது வளர்ந்தால் அவர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி, மண்டியிட வைப்பது ஜெ.வின் ஸ்டைல். இதற்கு உதாரணமாக ராமராஜன் முதல் வைகோ வரை நிறையப் பேர் உண்டு. அந்த வகையில் அடுத்து கேப்டவுன் வருவார் என்று நாம் எதிர்பார்த்திருந்த வேளையில் தானே முன்வந்து சிக்கியுள்ளார் ‘மாற்று சக்தி’ சீமான்.
சீமானின் மண்டியிடல் ஜெ.வைத் திருப்திப்படுத்தினால், விஜயலட்சுமியின் புகார் கண்டுகொள்ளாமல் விடப்படும். அல்லது முழுக்க சீமானின் டவுசரைக் கழட்டுவதே நல்லது என்று ஜெ. முடிவு செய்தால். சீமான் உள்ளே போக வேண்டி வரலாம்!