
தெய்வத்திருமகள் படத்தில் வக்கீல்களை இழிவுபடுத்தியதாக கூறி காமெடி நடிகர் சந்தானத்திற்கு எதிராக சென்னையில் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சந்தானம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், படத்தில் அந்த காட்சியை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பல்வேறு பட தலைப்பு பிரச்சனைகளுக்கு பின்னர், ஒருவழியாக விக்ரம், அனுஷ்கா, அமலாபால், நாசர், சந்தானம் உள்ளிட்டவர்கள் நடித்த தெய்வத்திருமகள் படம் கடந்தமாதம் ரிலீசானது. விஜய் இயக்கி இருக்கும் இப்படம் நல்ல வசூலையும், அனைவரின் பாராட்டையும் குவித்து வருகிறது. இந்நிலையில் இப்போது புதிதாக ஒரு சிக்கல் கிளம்பி இருக்கிறது. அதாகப்பட்டது, தெய்வத்திருமகள் படத்தில் சந்தானம் வக்கீல்களை இழிவுபடுத்தும் வகையில் நடித்துள்ளதாக கூறி சென்னை எழும்பூர் கோர்ட்டில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து வக்கீல்கள் கூறுகையில், வக்கீல் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில், காமெடி நடிகர் சந்தானம் நடித்துள்ளார். இதற்கு உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். வக்கீல்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ள காட்சிகளையும் படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தால், எழும்பூர் கோர்ட் ஒரே பரபரப்பாக இருந்தது.