கணவர் தனுஷை வைத்து தான் இயக்கும் முதல் படத்துக்கு 3 என்று வித்தியாசமாக பெயர் சூட்டியுள்ளார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இந்தப் படம் குறித்து அறிமுகம் செய்வதற்காக வெள்ளிக்கிழமை பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்தனர் ஐஸ்வர்யாவும் தனுஷும். நாயகி அமலா பாலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். இந்த சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு ஐஸ்வர்யா மற்றும் தனுஷும் அளித்த பதில்களும்: கேள்வி: எந்த நம்பிக்கையில்ஒரு இயக்குநராக களமிறங்குகிறீர்கள்? ஐஸ்வர்யா: என் கதையைக் கேட்ட அப்பா, அந்தப் படத்தை தானே தயாரிக்க விரும்புவதாகக் கூறினார். அந்த அளவு அவருக்கு நம்பிக்கை தந்த ஸ்கிரிப்ட் இது. இப்போது என் மாமனார் தயாரிக்கிறார். கேள்வி: உங்கள் மனைவி ஐஸ்வர்யா ஒரு இயக்குநராக உங்களை விரட்டி வேலை வாங்குகிறாரா, அன்பாக வேலை வாங்குகிறாரா? தனுஷ்: விரட்டியும் வேலை வாங்குகிறார். அன்பாகவும் வேலை வாங்குகிறார். நான் மற்ற இயக்குநர்களின் படங்களில் எப்படி வேலை செய்கிறேனோ, அப்படித்தான் இந்தப் படத்திலும் வேலை செய்கிறேன். கேள்வி: உங்களுக்கு தனுஷ் உதவியாக இருக்கிறாரா? ஐஸ்வர்யா: படப்பிடிப்பு தளத்தில் அவர் நடிகர். நான் இயக்குநர். என் வேலையில் அவர் தலையிடுவதில்லை. வீட்டில் எனக்கு உதவியாக இருக்கிறார். குழந்தைகளை பார்த்துக்கொள்வதில் எனக்கு ரொம்ப உதவியாக இருக்கிறார். கேள்வி: இந்த படத்தின் கதை தனுஷுக்காக எழுதப்பட்டதா? ஐஸ்வர்யா: எங்க வீட்டில் இரண்டு நடிகர்கள் இருக்கிறார்கள். கதை எழுதும்போது இரண்டு பேருமே நினைவுக்கு வருவார்கள். இந்த கதையை பொறுத்தவரை தனுஷை மனதில் வைத்து எழுதப்பட்டதுதான். ரஜினி நடிப்பாரா? கேள்வி: இந்த படத்தில் தனுஷூடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடிக்க வாய்ப்பு இருக்கிறதா? ஐஸ்வர்யா: இல்லை. அப்பாவிடம் நான் இதுபற்றி பேசவே இல்லை. கேள்வி: அமலா பால்தான் ஹீரோயின் என்பதை நீங்கள் முடிவு செய்தீர்களா? தனுஷா? ஐஸ்வர்யா: நான்தான் ('சொன்னா நம்புங்க... நான் இதிலெல்லாம் தலையிடுவதில்லை' என்கிறார் தனுஷ்!). கேள்வி: படத்தை இயக்குவது சிரமமாக இருக்கிறதா, சுலபமாக இருக்கிறதா? ஐஸ்வர்யா: படம் இயக்குவது சுலபம் இல்லை. நிறைய பொறுப்புகளை தோளில் சுமக்க வேண்டியிருக்கிறது. செல்வராகவன்தான் குரு: கேள்வி: படம் இயக்குவதைப் பொறுத்தவரை உங்களுக்கு குரு யார்? பதில்: செல்வராகவனிடம் இரண்டு படங்களில் உதவி இயக்குநராக இருந்தேன். நிறைய விஷயங்களை அவர் எனக்கு கற்றுத் தந்தார். அந்த வகையில் செல்வராகவன்தான் என் குரு. கேள்வி (தனுஷிடம்): சமீபத்தில் விரதம் இருந்து சபரிமலை சென்றீர்களே... என்ன வேண்டுதல்? தனுஷ்: வேண்டுதலை வெளியில் சொல்லக்கூடாது. கேள்வி: நீங்கள் படம் இயக்குவதாக கூறி வந்தீர்கள். இப்போது உங்கள் மனைவி ஆகிவிட்டார். உங்கள் ஆசையை உங்கள் மனைவி மூலம் நிறைவேற்றிக் கொள்கிறீர்களா? தனுஷ்: எனக்கு முன்பே இயக்குநராகும் திட்டத்தோடு இருந்தவர் ஐஸ்வர்யா. அவர் இயக்குநரானதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் இயக்குநராவது குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை. -இவ்வாறு இருவரும் பதிலளித்தனர்.