அனைத்து வகை மொபைல் போன்களுக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான சார்ஜர் உற்பத்தி செய்ய மொபைல் போன் நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன. மொபைல் போன்களை மாற்றும் போது, தனியாக அதற்கு சார்ஜர்கள் வாங்க வேண்டியுள்ளது. ஒவ் வொரு நிறுவனத்தின், ஒவ் வொரு மாடல் மொபைல் போனுக்கும், அதற்கென மட்டும் பொருந்தும் வகையில் சார்ஜர்கள் இணைத்து வழங்கப்பட்டன. அதற்கு முன்னர் பயன்படுத்திய சார்ஜர், பயன்படுத்த தேவையின்றி, வீணாகிறது.
இந்நிலையை மாற்றி, அனைத்து மொபைல் போன்களுக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான சார்ஜர்கள் கொண்டு வர ஜி.எஸ்.எம்.ஏ., மொபைல் போன் துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்த துறையினர் நடத்திய கூட்டத்தில் 17 மொபைல் போன் ஆபரேட்டர்கள், மொபைல் போன் தயாரிக்கும் முக்கிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. வரும் 2012ம் ஆண்டு முதல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் அனைத்து மொபைல் போன்களுக்கும், இனி சார்ஜர்கள் ஒரே மாதிரியாக இருக்கும். எந்த நிறுவனத்தின், எந்த மாடலுக்கும் இந்த சார்ஜர் பொருந்தும் வகையில் இருக்கும்.
இந்த சார்ஜர்கள், அதற்கு பின்னர் விற்பனைக்கு வரும் மற்ற மாடல் மொபைல் போன்களுக்கும் பொருந்துவதாக இருக்கும். தற்போது, பயன்படுத்த முடியாத பழைய சார்ஜர்களால் உலகம் முழுவதும், ஆண்டுக்கு 51 ஆயிரம் டன் கழிவுகள் ஏற்படுகின்றன. இதனால், சுற்றுச்சூழல் மாசு அதிகரிக்கிறது. இதையும் மனதில் கொண்டு தான், இனி ஒரே மாதிரி சார்ஜர்கள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் ஏடி அண்டு டி, கே.டி.எப்., - எல்.ஜி., - மொபைல்கோம் ஆஸ்டிரியா, மோட்டரோலா, நோக்கியா, ஆரஞ்சு, குவால் காம், சாம்சங், சோனி எரிக்சன், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. புதிதாக வெளிவர இருக்கும் சார்ஜர்கள், மின் சிக்கனத்துக்கும் வழி வகுப்பதாக இருக்கும். தற்போது பயன்படுத்தப்படும் சார்ஜர்களில் இருந்து 50 சதவீதம் மின் சிக்கனம் கொண்டவையாக இவை இருக்கும்.