இந்திப் படப் பாடல்களுக்கு தலையாட்டி ரசித்து கொண்டிருந்த தமிழர்களை தமிழ்பாட்டு பக்கம் இழுத்து வந்தவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா என்றால் அந்த இந்திக்காரர்களையே தமிழ்பாட்டுக்கு தலையாட்ட வைத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
இவர் சங்கீதப் பரம்பரையைச் சேர்ந்தவர். இவரது தாத்தா ராஜகோபால் பாகவதர் அந்தக்கால கதாகாலட்சேபம் நடத்தியவர். அவரது மகனான ஆர்.குணசேகர் என்கிற ஆர்.கே.சேகர் மலையாள திரையுலகின் மிகப்பெரிய இசை வல்லுநர். 22 படங்களுக்கு இசையமைத்தவர் அவரது வழிதோன்றல்தான் திலீப்குமார் என்கிற ஏ.ஆர்.ரஹ்மான். 1966 ஜனவரி 6ஆம் நாள் ஆர்.கே.சேகர் கஸ்தூரி தம்பதிகளின் மூத்த பிள்ளையாக பிறந்த திலீப் இன்று ஏ.ஆர்.ரஸ்மான் என்ற பெயரில் உலகப் பெற்றிருக்கிறார். 1977இல் கேன்சர் நோய்க்கு தந்தையே பறிக் கொடுத்தபோது அந்த இசை இளவலுக்கு வயது பதினொன்று.
தந்தையின் இழப்புக்கு பின் குடும்பத்தில் வறுமை புகுந்து கொள்ள குடும்பத்தின் ஒரே ஆண் மகனான அந்த சின்ன வயதிலே இசைக்குழுக்களில் சேர்ந்து உழைக்க ஆரம்பித்தார். ரஹ்மான் முதன்முதலாக வாசிக்கக் கற்றுக் கொண்டது பியானோ, தமது பதினொரு வயதில் கிடார் மற்றும் 'கீ போர்டு' இசைக்க கற்றுக்கொண்டார். இளம் வயதிலேயே ரஹ்மான் இசையின் ஆரம்ப கட்டப் பயிற்சியை தந்தையிடம் பெற்றிருக்கிறார். வீடெங்கும் இசைக்கருவிகள் இருந்த சூழல் வளர்ந்தார். நான்கு வயதான திலீப் (ரஹ்மான்) ஹார்மோனியத்தில் ஒரு பாடலை வாசிக்கக் கேட்ட சுதர்சனம் மாஸ்டர் அதன் கட்டைகளை ஒரு துணியால் மறைந்தாராம். குழந்தை தன்னம்பிக்கையுடன் அதே மெட்டை மறுபடியும் வாசித்துக் காண்பித்ததாம்.
மகனின் ஆபூர்வமான திறமையைக் கண்ட சேகர் அப்போது சொன்னாராம் ''என் வாழ் நாளெல்லாம் நான் இரண்டாம் இடத்திலேயே இருந்துவிட்டேன். என் மகன் வழியாக ஒரு நாள் நான் வெற்றிபெறுவேன் என்று! அவர் வாக்கு பலித்து விட்டது மகனின் வழியாக! தென்னிந்தியாவில் மட்டுமல்ல இந்திய அளவில் ஏன் உலக அளவில் வெற்றி பெற்றுவிட்டார் ரஹ்மான்.
தமது தந்தையுடன் பாடல் பதிவுக் கூடங்களுக்குக் சென்றது தான் ரஹ்மானின் இளமைப் பருவத்தின் பொக்கிஷமான முக்கிய நினைவுகள்:
''எனக்கு ஊக்கமூட்டும் நினைவாக இருப்பது என் தந்தையின் நினைவுதான். எங்கள் வீட்டு வரந்தாவில் அன்றைய புகழ்பெற்ற இயக்குநனர்கள் வந்து காத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
ஒரே சமயத்தில் எட்டு ஒன்பது படங்களக்கு என் தந்தை உழைப்பார். ஒன்றுக்கு இசையமைப்பார் மற்றொன்றுக்கு இசை கோர்ப்பு செய்து கொடுப்பார். இன்னொரு புறம் இசை நடத்துவார். இப்படி நேரம் காலம் பாராமல் உழைத்து கொண்டே இருந்ததால் தான் அவர் உயில் துறந்தார் என்று நான் நினைக்கிறேன் என்கிறார் ரஹ்மான்.
1987 முதல் அவர் விளம்பர படங்களுக்கு இசையமைத்தார் சுமார் 300க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் சின்னத்திரை வழியாக அவரது இசை வலம் வந்தது. ரஹ்மானின் விளம்பர இசையை பார்த்துதான் மணிரத்னம் அவரை தமது படத்திற்கு இசையமைப்பாளராக நியமித்தார். 1992ஆம் சுதந்திர தினத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது என்பார் ரஹ்மான். காரணம் 'ரோஜா படம் வெளியாகி தென்னிந்தியா திரும்பி பார்த்த நாள் அதுதான். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார் ரஹ்மான். இந்திய இசைமைப்பாளர்களிலேயே அதிக தடவை தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரஹ்மான் தான்.
பத்மஸ்ரீ, பத்மபூஷன், ராஜீவ்காந்தி விருது, தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது, பிரபல இந்தி இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மன் நினைவாக வழங்கப்படும் ஆர்.டி.பர்மன் விருது. எம்.டி.வி.யின் வாழ்நாள் சாதனை விருது. 18 முறைகளுக்கு மேல் பி ம்ஃபேர் விருது என ரஹ்மானை பெருமைப்படுத்திய விருதுகளின் எண்ணிக்கை அதிகம். உலக அளவில் திரைப்படத் துறையினருக்கான உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் இன்று காலை அறிவிக்கப்டடது. ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக சிறந்த இசைக்காகவும், சிறந்த பாடலுக்காகவும் ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றார். ஆஸ்கார் விருதை பெறும் முதல் தமிழர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக, பிரபல இயக்குனர் சத்ய ஜித்ரேக்கு வாழ்நாள் சாதனையாளர் என்ற பெயரில் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு இருக்கிறது.