சீனாவின் கடற்கரை நகரமான கிங்டாவில் உள்ள ஒரு உணவு விடுதியில் பணிப்பெண்ணாக பணியாற்றியவர் யு லியு. 2000வது ஆண்டில், தொழிலதிபர் பன் என்பவரை சந்தித்தார். இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. தொழிலதிபர் பன், ஏற்கனவே நான்கு பேரை திருமணம் செய்து கொண்டிருந்தார். ஐந்தாவதாக உணவு விடுதி பணிப் பெண் யு லியுவையும் திருமணம் செய்து கொண்டார். பின்னர், அவரை, தனது மூத்த மனைவிகள் நான்கு பேர், தனது ஊழியர்கள் இருவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். மனைவிகள் அனைவருக்கும் தனித்தனியே மாதம் 35 ஆயிரம் ரூபாய் பணமும், இலவச அடுக்கு மாடி குடியிருப்பும் வழங்கி இருந்தார்.
ஆனால், சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக, பன்னின் தொழில் நசிவடைந்தது. இதைத் தொடர்ந்து, ஐந்து மனைவிகளை பராமரிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டார் பன். அவர்களில் ஒருவரை மட்டும் தன்னுடன் வைத்துக் கொண்டு, மற்றவர்களை கழற்றி விட முடிவு செய்தார். கழற்றிவிடப்பட்டவர்களின், அடுக்கு மாடி குடியிருப்புகளையும், நல்ல விலைக்கு விற்பனை செய்து, தொழிலில் மறு முதலீடு செய்ய திட்டமிட்டார். இதற்காக, ஐந்து மனைவிகளில் யார் அழகானவர், நன்றாக மது அருந்துபவர் என்பதன் அடிப்படையில், ஒரே மனைவியை மட்டும் தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்தார். அப்படிப்பட்ட ஒருவரை தேர்வு செய்ய மாடலிங் ஏஜென்சியில் இருந்து ஒரு நடுவரை பணியமர்த்தினார்.
ஒரு ஓட்டலில் அழகிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதல் சுற்றிலேயே தோற்றப் பொலிவு போட்டியில் இருந்து யு லியு விலக்கப்பட்டார். இத்தனைக்கும் மது குடிக்கும் போட்டியில் அவர் தான் முதலிடத்தை பிடித்தார். இருப்பினும், யு லியுவை முதலாவதாக கழற்றிவிட பன் முடிவு செய்து விட்டார். இதை யு லியுவிடம் தெரிவித்த பன், அவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பையும் விற்பனை செய்ய முடிவு செய்துவிட்டதாக தெரிவித்தார். இதனால், கடும் கோபமடைந்தார் யு லியு. தனது மாஜி கணவரையும், அவரது மற்ற நான்கு மனைவிகளையும் பழிவாங்க முடிவு செய்தார். விருந் துக்கு போகலாம் என்று கூறி அவர்களை காரில் ஏற்றிக் கொண்டு தானே ஓட்டிக்கொண்டு போனார். பள்ளத்தில் காருடன் பாய்ந்தால் எல்லாரும் இறந்து விடுவர் என்பது தான் அவர் எண்ணம்.
ஆனால், கார் நொறுங்கி ஏற்பட்ட விபத்தில் யு லியு மட்டும் இறந்து போனார். பன் மற்றும் நான்கு மனைவிகளும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். ஆரம்பத்தில், இது ஒரு சாதாரண விபத்து என்று தான் கருதப்பட்டது. பின்னர் தான் இது பழிவாங்க நடத்தப்பட்ட சம்பவம் என்பது தெரியவந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய பன், இறந்து போன யு லியு குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக ரூ.40 லட்சம் அளித்துள்ளார். மற்ற மனைவிகளும், பன்னை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இப்போது பன் தனி மரமாக நிற்கிறார். சீன பத்திரிகைகளில் இந்த செய்தி வெளியாகி உள்ளது. பன் குறித்து, அவரது வயது, தொழில் போன்ற விவரங்கள் எதுவும் அதில் தெரிவிக்கப்படவில்லை.