எப்பேற்பட்ட சிறந்த இயக்குநர் அல்லது படைப்பாளியாக இருந்தாலும் அவர்களின் கயமைத் தனத்தை ஒரு அளவுக்கு மேல் மறைக்கவே முடியாமல் போகிறது. சமயத்தில் அவர்களாகவே உளறிக் கொட்டி மாட்டிக் கொள்வதும் உண்டு. அதில் லேட்டஸ்ட் வரவு பாலு மகேந்திரா.
ரஹ்மான் தனது முதல் தேசிய விருதினைப் பெற்றதன் பின்னணிக் கதை ஒன்றை, நேற்று ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சொன்னார் பாலு மகேந்திரா.
17 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை இது. இத்தனை நாட்கள் கழித்து நேற்றுதான் அதை வெளிப்படுத்தினார். ஆனால் அதைக் கேட்ட பிறகு அந்த மனிதர் மீதிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயே போய்விட்டது.
இளையராஜா என்ற மாபெரும் கலைஞனை இதைவிட பெரிதாக அவமானப்படுத்திவிட முடியுமா என்பது தெரியவில்லை.
இந்தச் சம்பவம் நடந்த போது பாலுமகேந்திராதான் தேசிய விருதுக் குழு தலைவரும் கூட. அப்போது சிறந்த இசைக்குரிய பிரிவில் இளையராஜா இசையில் கமல் நடித்த தேவர் மகனும், ரஹ்மான் முதன்முதலில் இசையமைத்த ரோஜாவும் போட்டியிட்டன.
இதில் ரோஜாவின் இசைக்கு விருது கொடுத்தார்கள். ஆனால் அப்படி விருது தரும்முன் நடந்த அரசியலை நேற்றுதான் பாலுமகேந்திரா வெளிப்படுத்தினார். அதாவது ரஹ்மான் உயர்வுக்கு நானும் முக்கியக் காரணமாக இருந்தேன் என்பதை நிலை நிறுத்த அப்படிச்சொன்னாரோ என்னமோ… ஆனால் அதைக் கேட்ட பிறகு… சீ என்றாகிவிட்டது.
சிறந்த இசைக்கான விருது பெற இசையைத் தாண்டி வேறு என்னவெல்லாம் தகுதியாக உள்ளன பாருங்கள்!
எது சிறந்த இசை?
ஒரு சமூகத்தின், பிராந்தியத்தின் உணர்வுகளைப் பிரதிபலிப்பலிப்பதே நல்ல இசை. அது எந்த வயதுக்காரனிடமிருந்து வந்திருந்தால் என்ன?
அந்த வகையில் தேவர் மகன் இசை, வேறு யாருடைய அல்லது எந்தப் படத்தினுடைய இசையுடனும் ஒப்பிட முடியாதது. அத்தனைச் சிறப்பு அந்தப் படத்தின் பின்னணி இசைக்கு உண்டு. தேவர் மகனில் ராஜாவின் பின்னணி இசையை இப்போது கேட்டாலும் கண்முன் படக் காட்சிகள் அப்படியே அழகழகாக விரியும்.
ஆனால் ரோஜாவைப் பொறுத்தவரை, பின்னணி இசை அத்தனைப் பிரமாதமில்லை. பாடல்களுக்குத்தான் பெரிய வரவேற்பு.
ஆனால் அந்தப் படத்துக்குத்தான் விருது கொடுக்க சிபாரிசு செய்துள்ளார் பாலுமகேந்திரா. காரணம், ‘சின்ன பையன் என்பதால் பரிந்துரைத்தேன்’ என்று இப்போது கூறியுள்ளார்.
இசையின் ஜீவன், ஒரு படத்துக்கு எப்படியெல்லாம் அந்த இசை உயிரூட்டுகிறது? அந்த இசை படம் பார்ப்பவருக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் என்ன… என்பதைப் பார்த்துதான் ஒரு படத்துக்கு விருது தரப்பட வேண்டுமே தவிர, இவர் இளைஞர், அவருக்கு விருது கொடுத்துவிடலாம் என்று கொடுப்பதில் என்ன லாஜிக் இருக்கிறது? அதுவும் விருதுக் குழுவின் தலைவரே இதைச் செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியைத் தந்தது.
இந்த தேசிய விருதினை தவற விட்டதால் ராஜாவின் மதிப்போ தரமோ குறைந்துவிடப் போவதில்லை. ஆனால் பெற்ற விருதுகள் மற்றும் வாங்கும் சம்பளத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து ஒரு இசைக் கலைஞரை மதிப்பிடுபவர்கள்தானே இங்கு அதிகம்? ரஹ்மான் பெற்ற இரண்டு ஆஸ்கர்கள்தானே அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வைத்துள்ளது நம்மையெலலாம்.
அப்புறம் எதற்கு போட்டி, ஓட்டு? இசையமைப்பாளர்களின் வயதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விருதுகளை வழங்கிவிடலாமே! அப்படியெனில் இத்தனை ஆண்டுகளாக திறமைகள் ஓரங்கட்டப்பட்டு, லாபி அல்லது தனி நபர்களது விருப்பத்தின் அடிப்படையில்தான் விருதுகளை வழங்குகிறார்களா?
தேவர் மகன் என்ற அந்த நல்ல படத்துக்கு, பல புதிய பரிமாணங்களைத் தந்தது ராஜாவின் இசை. தென் மாவட்ட மக்களின் ஆன்மாவை அப்படியெ வெளிக்கொணர்ந்த காட்சியமைப்புகள் நிறைந்த அந்தப்படத்தை, ராஜாவின் இசை தவிர்த்துப் பார்த்தால் ரசிக்க முடியாது. தேவர் மகனோடு ஒப்பிடுகையில் ரோஜாவின் இசை மிகச் சாதாரணமான ஒன்று (அந்த விருது தனக்கு மகிழ்ச்சியைவிட அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையுமே ஏற்படுத்தியது என ரஹ்மான் கூறியுள்ளதை நினைவுகூரத்தக்கது. )
ஆனால் அந்தப் படம் சிறந்த இசைக்கான தேசிய விருது பெறுவதை, ரஹ்மானுக்காக தடுத்திருக்கிறார் பாலுமகேந்திரா.
என்னதான் செய்தார் அப்படி?
இதோ அவரே நேற்று வெளியிட்ட ரகசியம்!
இந்திரவிழா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா.
பாலுமகேந்திரா மைக்கப் பிடித்தார்.
“நானும் ரஹ்மானும் இணைந்து பணியாற்றாவிட்டாலும், ரஹ்மானின் ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு என்னாலான உதவியைச் செய்திருக்கிறேன் என்ற உரிமையில் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். இதுவரை எங்கும் இது பற்றி நான் சொன்னதில்லை.
ரஹ்மான் இசையமைத்த ரோஜா படமும், இளையராஜா இசையமைத்த தேவர் மகனும் ஒரே நேரத்தில் மத்திய அரசின் விருதுக் கமிட்டிக்கு வந்தன. நான்தான் விருதுக் குழுவின் தலைவர் அப்போது. இரண்டு படங்களும் சிறந்த இசைக்கான பிரிவில் தலா 7 ஓட்டுக்கள் வாங்கி சம் நிலையில் இருந்தன. நான் என்னுடைய ஓட்டைப் போடாமல் ஒதுங்கி இருக்க முடிவு செய்திருந்தேன். ஆனால் கடைசியில் நான் ஓட்டுப் போட்டே தீர வேண்டிய நிர்ப்பந்தம்.
ஒரு பக்கம் என் நண்பர் இளையராஜா. மறுபக்கம், இருபத்தைந்து வயது மட்டுமே நிரம்பிய ஒரு இளைஞன். ஆனாலும் இளையராஜா என்ற இசை மா மலையை எதிர்த்து ஒரு சிறுவன் நிற்கிறானே, அவனுக்கு இப்போது கிடைக்கும் தேசிய விருது இன்னும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளிக்குமே என்று நினைத்தேன்.
தலைவர் என்ற முறையிலேயும் உறுப்பினர் என்ற முறையிலும் எனக்கு இருந்த இரண்டு ஓட்டுகளையும் ரஹ்மானுக்கே போட்டு ஜெயிக்க வைத்தேன். அந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ரஹ்மானுக்குக் கிடைத்தது. அதன் பிறகு நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியும்…”, என்றார் பாலு மகேந்திரா.
இதை என்னவென்று சொல்வது?
ரஹ்மானுக்கு முதல்முறையாக இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் விருது கொடுத்த போதே இந்த உண்மையைச் சொல்லியிருக்கலாமே…!
நிச்சயம் ஆஸ்கர் வென்ற ரஹ்மானை விமர்சிக்கும் நோக்கத்திலல்ல இதைக் குறிப்பிடுவது. அவர் ஆஸ்கர் வெல்ல வேண்டும் என்றே நாமும் பிரார்த்தித்தோம்.
ஆனால் அவர் முதல் தேசிய விருது பெறுவதற்காக, தமிழகத்தின் இன்னொரு மகத்தான கலைஞனை பாலுமகேந்திரா போன்றவர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிடவே இதை எழுதுகிறோம்.
நன்றி -என்வழி .காம்