ஏ.ஆர்.ரகுமானுக்கு தலைவர்கள் வாழ்த்து
ஸ்லம்டாக் மில்லினர்' படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசை மற்றும் சிறந்த பாடலுக்கான இரண்டு ஆஸ்கார் விருது கிடைத்தது. ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சிறந்த மிக்சிங் சவுண்டு அமைத்த ரசல் பூகுட்டிக்கு ஜனாதிபதி பிரதிபா பட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு பெறுமை சேர்த்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளனர். சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இந்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், தமிழக முதல்வர் கருணாநிதி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் ஆயிரம் ஆயிரம் விருதுகள் பெற வாழ்த்துகிறேன்: கலைஞர்
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
இசை என்றாலே தமிழி:ல புகழ் என்று தான் பொருள். அந்தப் பொருளுக்கு ஏற்ப பூத்து, மலர்ந்து, புகழ் பெருக்கி இன்று சிகரத்துக்கே சென்று, சிரித்த முகத்தோடு நம்முடைய வாழ்த்தக்களைப் பெறுகிற, சென்னையில் பிறந்த செல்வன் ஏ.ஆர்.ரகுமான். இவருக்குக் கிடைத்துள்ள ஆஸ்கார் விருதுகள் கண்டு முத்தமிழே முறுவலிக்கிறது.
சிறுபான்மை சமுதயாத்தைச் சேர்ந்த இந்தச் செல்வம் இன்று ஆஸ்கர் விருதுகளைப் பெற்றதின் மூலம் தரணி வாழ் கலைஞர்கள் உள்ளத்தில் எல்லாம் இடம் பெற்றுவிட்டார். குறிப்பாகவும் சிறப்பாகவும் உரிமையோடு சொல்ல வேண்டுமானால் இது நம் வீட்டுப் பிள்ளைக்குக் கிடைத்த மிகப்பெரிய கீர்த்தி, சிறப்பு, பெருமை. ரகுமான் புகழ் மகுடத்தில் இந்த ஆஸ்கார் பதிந்துள்ள மாணிக்க, மரகதக் கற்களாக இந்த விருதுகளை நான் கருதுகிறேன்.
தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும், அதற்குத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கிற நானும், தமிழ்நாட்டின் ஆறு கோடி மக்களும், ஏன் இந்தியத் திருநாட்டின் நூறு கோடி மக்களும், உலகத் கலைஞர்களும் மலர் தூவி, வரவேற்று, மகிழ்ச்சியைத் தெரிவித்து, மாசற்ற மனதோடு சேயாகப் பாவித்து, தயாக நின்று வாழ்த்துகிற போது,அந்த வாழ்த்துக்களில் என் வாழ்த்துக்களும் இணைகிறது.
ஆஸ்கார் விருதுகள் பெற்ற அருமைத் தம்பி இன்னும் ஆயிரம் ஆயிரம் விருதுகள் பெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு தமிழன் இந்தியாவுக்கு ஈட்டித்தந்திருக்கும் மிகப்பெரிய பெருமை. இது ஏ.ஆர்.ரகுமானின் உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
அவர் இன்னும் பல விருதுகளை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். பொதுவாக மூன்றாம் உலக நாடுகள் ஆஸ்கர் விருதுகளால் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. அந்த பழியை இந்த விருது துடைத்திருக்கிறது.
ஏ.ஆர்.ரகுமானின் இந்த விருதால், தமிழகத்தின் பெருமை, இந்தியாவின் பெருமை, உலக கலையுலகில் வெளிச்சத்தை காட்டியிருக்கிறது. மீண்டும் மீண்டும் ஏ.ஆர்.ரகுமானுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜெயலலிதா வாழ்த்து
ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசை மற்றும் சிறந்த பாடலுக்கான இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்துள்ளன. இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.