லண்டன்: தமிழக இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இளையராஜா ஆகியோரின் பாடல்கள் உள்ளிட்ட இசை நிகழ்ச்சியுடன் லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டி கோலாகல துவக்க விழாவுடன் இன்று துவங்க உள்ளது. மொத்தம் 3 மணிநேரம் நடைபெற உள்ள துவக்க விழாவில் இசை விழா, நடனம், அணிகளின் அணிவகுப்பு ஆகியவை நடைபெற உள்ளது.
லண்டன் நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு (இந்திய நேரப்படி நாளை அதிகாலை 1.30 மணிக்கு) துவக்க விழா நடைபெறும். இந்த விழாவின் ஏற்பாடுகள் ஆஸ்கார் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லினியர் படத்தின் இயக்குனர் டேனி போலே மேற்பார்வையில் நடைபெறுகிறது.
லண்டன் ஒலிம்பிக் துவக்க விழாவில் தமிழகத்தை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், பஞ்சாபி இசையை தழுவிய இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். 'நிம்மா நிம்மா' என்று தொடங்கும் பாடலுக்கு, பின்னணி இசையுடன் பல பின்னணி பாடகர்களின் குரல்களுடன் இணைத்து இனிய இசை நிகழ்ச்சியை அளிக்க உள்ளார் ரஹ்மான்.
அதேபோல தமிழக இசை ஞானி இளையராஜா இசையமைத்து கடந்த 1980ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து வெளியான 'ராம் லக்ஷ்மன்' படத்தில் வெளியான 'நான் தான் உங்க அப்பன்டா' என்ற பாடலும் இசைக்கப்பட உள்ளது.
துவக்க விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகளை இங்கிலாந்தை சேர்ந்த பல நடன குழுவினர் நடத்த உள்ளனர். மேலும் துவக்க விழாவில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள 204 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் அணிவகுப்பு இடம் பெறும். இதில் ஒவ்வொரு நாடுகளும் கொடிகளை ஏந்தி வரிசையாக அணிவகுத்து வர உள்ளனர். இதில் இந்திய கொடியை மல்யுத்த வீரர் சுசில் குமார் ஏந்தி செல்ல உள்ளார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவிற்கு வந்துள்ள அனைவரையும், இங்கிலாந்து ராணி எலிசபெத் II வரவேற்க உள்ளார். துவக்க விழாவின் இறுதியாக வண்ண மையமான வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும். துவக்க விழாவை முன்னிட்டு லண்டன் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.