மும்பை: ஷங்கரின் ஐ படத்தில் தான் நடிக்கப் போவதாக வந்துள்ள செய்திகளை தீபிகா படுகோன் மறுத்துள்ளார். அப்படியெல்லாம் எதுவும் இல்லை, இது வெறும் வதந்திதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஷங்கர் இயக்கும் புதுப் படம் ஐ. விக்ரம் நாயகன். இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக எமி சாக்சன் நடிக்கிறார். இந்த நிலையில் தீபிகா படுகோனையும் இப்படத்தில் முக்கியக் கேரக்டரில் ஷங்கர் புக் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் தீபிகா.
இதுகுறித்து பிடிஐக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நானும் கூகுள் அலர்ட் மூலம் இந்த செய்தியைப் பார்த்தேன். ஆனால் இது முற்றிலும் தவறானது, வதந்தி மட்டுமே. நான் ஷங்கர் படத்தில் நடிக்கவில்லை என்று மறுத்துள்ளார்.
அடுத்து தனது சைஸ் ஜீரோ உடலமைப்பு குறித்து தீபிகாவிடம் கேட்கப்பட்டது. அதுகுறித்து அவர் கூறுகையில், சைஸ் ஜீரோ குறித்தெல்லாம் நான் பெரிதாக கவலைப்படுவதில்லை. உடல் ஆரோக்கியமும், நல்ல உடல் வளமும்தான் முக்கியம். நல்ல பருமனாக, பொதபொதவென்று இருப்பவர்கள் கூட நல்ல உடல் வலுவுடன் திகழ்வதைப் பார்த்திருக்கிறேன். எனவே சைஸ் ஜீரோவா, இல்லை பீரோ சைஸா என்பது முக்கியமில்லை. ஆரோக்கியம்தான் முக்கியம் என்றார்.