
23 ஜூன் 2009
இன்று விஜய் பிறந்த நாள்: இலவச கம்ப்யூட்டர் மையங்கள் திறப்பு
தமிழ் திரையுலகில் இளையதளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய்க்குஇன்று 36-வது பிறந்தநாள். இந்த பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் கல்விப் பயிற்சி மையங்களைத் திறக்கப் போவதாக அறிவித்துள்ளார் விஜய்.22062009
அடுத்த ஆண்டு தான் ஆரம்பிக்கவிருக்கும் அரசியல் இயக்கத்துக்கு அச்சாரமாக இந்த நற்பணிகளைச் செய்யவிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இன்றைய பிறந்த நாள் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மற்றும் சாலிகிராமம் அருணாச்சலா சாலையில் இரு கம்ப்யூட்டர் மையங்களைத் திறந்து வைத்தார் விஜய். இவை தவிர தமிழகம் முழுவதிலும் இது போன்ற கல்வி மையங்களைத் திறக்கவிருப்பதாகவும் கூறினார் விஜய்.
பின்னர் வடபழனியில் உள்ள அவரது ஜே.எஸ்.கல்யாண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாம்களை விஜய் தொடங்கி வைத்தார். 10-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் முகாமில் பங்கேற்று சிகிச்சை அளித்தனர். விழாவில் 100 ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர்.
பிறந்த நாளையொட்டி ரசிகர்களைச் சந்தித்த விஜய் பல்வேறு உதவிகளை வழங்கினார். வடபழனி முருகன் கோயில் அருகில் ஏராளமான ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்.
லிட்டில் பிளவர் பள்ளி, மெர்சி ஹோம், ஸ்மாஸ்டிக்சொசைட்டி போன்றவற்றில் விஜய் மதிய உணவு வழங்கினார்.
வடபழனி, கோடம்பாக்கம், சாலிகிராமம் முழுக்க விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியும், 'நாளைய முதல்வர் விஜய்' என வர்ணித்தும் பேனர்கள், விஜய் மன்ற கொடிகள் மற்றும் போஸ்டர்கள் மயமாகவே இருந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் மற்றும் ரசிகர் மன்றத்தினர் செய்திருந்தனர்.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். அவர்களுக்கு தனது கல்யாண மண்டப பால்கனியில் நின்றபடி டாட்டா காட்டினார் விஜய்!
