23 ஜூன் 2009
அப்ரிதிக்கு 'டோப்' டெஸ்ட்!-யூனிஸ் கான் ஓய்வு!!
லண்டன்: டுவென்டி 20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் வெல்ல பேருதவி புரிந்த ஆல் ரவுண்டர் ஷாஹித் அப்ரிதிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திடீரென ஊக்க மருந்து சோதனை நடத்தியுள்ளது.
நேற்று லண்டனில் நடந்த டுவென்டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
இந்த நிலையில் அப்ரிதிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஊக்க மருந்து சோதனை நடத்தியுள்ளது. ஊக்க மருந்து சோதனை நடத்த வருமாறு அப்ரிதிக்கு திடீரென அழைப்பு விடுக்கப்பட்டதாம். போட்டியின் முடிவில் சோதனைக்கு அழைக்கப்பட்டுள்ளார் அப்ரிதி.
இதனால் அப்ரிதியும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் வியப்படைந்தனராம்.
ஆனால் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரருக்கு இதுபோன்ற சோதனை நடத்துவது வழக்கமானதுதான் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அணியில் இல்லை..
இதற்கிடையே, இலங்கை செல்லும் பாகிஸ்தான் அணியில் அப்ரிதி சேர்க்கப்படவில்லை.
வருகிற 26-ம் தேதி முதல் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது பாகிஸ்தான்.
இதற்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அப்ரிதி இடம் பெறவில்லை.
மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அப்ரிதி இடம் பெறவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
யூனிஸ் கான் ஓய்வு!!:
இதற்கிடையே டுவென்டி-20 உலக கோப்பை தொடரை வென்ற மகிழ்ச்சியுடன் டுவென்டி்-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007ல் நடந்த முதல் டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி, பாகிஸ்தான் வீழ்த்தி கோப்பை வென்றது. இந்நிலையில் நேற்று இரண்டாவது முறையாக டுவென்டி-20 உலக கோப்பை தொடரின் பைனலில் விளையாடிய யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி, இலங்கையை வீழத்தி கோப்பை வென்றது.
இந்நிலையில் கோப்பை வென்ற மகிழ்ச்சியுடன் டுவென்டி-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கேப்டன் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், கோப்பையை என் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன். இது தான் நான் விளையாடிய கடைசி டுவென்டி-20 போட்டி. இந்த போட்டியுடன் டுவென்டி-20 போட்டியிலிருந்து ஓய்வு பெறுகிறேன். எனக்கு தற்போது 34 வயதாகிவிட்டது. இந்த வயதுக்கு மேல் டுவென்டி-20 விளையாட முடியாது.
பாகிஸ்தான் வாருங்கள்...
சமீபகாலமாக பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. அனைத்து நாடுகளும் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். அப்போது தான் எனது மகனும், பக்கத்து வீட்டு சிறுவர்களும் கிரிக்கெட் விளையாட அதிக ஆர்வம் காட்டுவார்கள். பாகிஸ்தானில் கிரிக்கெட்டை வளர்க்க முடியும்.
பாகிஸ்தான் வீரர்களாக சிறப்பாக விளையாடினார்கள். அதிரடி அப்ரிதி ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்தை என்னால் நம்ப முடியவில்லை. நாங்கள் உலக கோப்பை தொடருக்கு முன்பாக பயிற்சி போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் லீக் போட்டி ஆகியவற்றில் தோல்வியடைந்தோம்.
இதனால் நாங்கள் சூப்பர்-8 தொடருக்கு முன்னேற மாட்டோம் என விமர்சித்தார்கள். தொடரை தோல்வியுடன் துவக்கினாலும் இறுதியில் கோப்பையுடன் நாடு திரும்புகிறோம் என்றார் யூனிஸ்.