
21 ஜூன் 2009
3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை - ஆகஸ்டில் ஏலம்
டெல்லி: நவீன செல்போன் தொழில் நுட்பமான 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலத்தில் விடுகிறது மத்திய அரசு. இதன் மூலம் அரசுக்கு ரூ.32 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகமும் நிதியமைச்சகமும் அறிவித்துள்ளன.
அடுத்த தலைமுறைக்கான நவீன செல்போன் சேவைகளை உள்ளடக்கிய 3-வது தலைமுறை (3 ஜி) ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டை ஏலத்தில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த அலைவரிசை வசதி இருந்தால் போதும், செல்போனில் அதிவேக இண்டர்நெட், வீடியோஸ் மற்றும் சில மதிப்பு கூட்டு சேவைகளைப் பெறலாம்.
இப்போதைக்கு மத்திய அரசின் எம்.டி.என்.எல்., பி.எஸ்.என்.எல். நிறுவனங்களுடன், 6 தனியார் நிறுவனங்களுக்கு இந்த சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஒதுக்கீட்டிற்கான குறைந்தபட்ச ஏலத்தொகையை ரூ.2 ஆயிரத்து 20 கோடியாக நிர்ணயம் செய்ய தொலைத் தொடர்புத்துறை விரும்பியது. ஆனால், நிதி அமைச்சகம் இந்த தொகையை ரூ.4 ஆயிரத்து 40 கோடியாக உயர்த்துமாறு அறிவுறுத்தியது.
இதனைத தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் ஆ ராசா ஆகியோர் சந்தித்துப் பேசினர். பிரதமர் மன்மோகன்சிங் முன்னிலையில், இந்தப் பேச்சுக்கள் நடந்தன. இறுதியில் ஒருமித்த கருத்துக்கு வந்தனர்.
அதன்படி, குறைந்த பட்ச ஏலத்தொகையை ரூ.4 ஆயிரத்து 40 கோடியாக நிர்ணயம் செய்ய ஒப்புக் கொண்டது மத்திய தகவல் தொடர்புத் துறை. ஆகஸ்டு மாத மத்தியில் ஏலம் நடைபெறும். இந்த ஏல விற்பனை மூலம் மத்திய அரசுக்கு ரூ.32 ஆயிரத்து 320 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஏலப் போட்டியில், அரசுத் துறையின் இரு நிறுவனங்கள் தவிர, பார்தி ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், டாடாஸ் மற்றும் சில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
வயர்லெஸ் பிராடுபேண்ட் எனப்படும் வி மேக்ஸ் சேவையையும் ஏலத்தில் விட முடிவு செய்துள்ளது தொலைத் தொடர்பு அமைச்சகம். இதற்கு ஆரம்பத்தில் குறைந்தபட்ச ஏலத் தொகையாக ரூ.1010 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இப்போது அது ரூ.2020கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
