26 ஜூன் 2009
'கோபம் கொண்ட ராஜா...' பாக்யராஜின் ப்ளாஷ்பேக்
திரையுலகில் தனக்கு முந்தைய சாதனையாளர்கள் பற்றித் தெரிந்து கொள்ளாத எவரும் சாதிக்க முடியாது, என்றார் இயக்குநர் பாக்யராஜ்.
ஏழு புதுமுகங்கள் நடித்துள்ள புதிய படம் புகைப்படம். இந்தப் படத்தில் புதுமுகங்கள் யாமினி, பிரியா ஆனந்த், மிருணாளினி, நந்தா, அம்ஜத், சிவம்,ஹாரீஸ், டி.கே.மதன் ஆகியோருடன் சண்முகசுந்தரம், வெங்கட், நீலிமா, தேவகி, ஞானசம்பந்தம், சிவபாலன், முத்துராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
கங்கை அமரன் இசையமைக்க பாடல்களை நா.முத்துக்குமார், கவிஞர் விவேகா, கங்கை அமரன், ராஜேஷ்லிங்கம் ஆகியோர் எழுதி உள்ளனர். விஜய் ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு - பி.லெனின். பிஆர்ஓ பாலன்.
இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
பாடல்களை இயக்குநர் கே பாக்யராஜ் வெளியிட, இயக்குநர் மகேந்திரன் மற்றும் நடிகர் மோகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் பாக்யராஜ் பேசியதாவது:
சினிமாவில் என்றல்ல... எந்தத் துறையாக இருந்தாலும் பழைய விஷயங்களை, முன்னோடிகளின் சாதனைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் புதிதாகச் சாதிக்க முடியாது.
இலக்கணம் தெரிஞ்சாதான் அதை உடைக்க முடியும். மரபுக் கவிதை தெரிஞ்சாதான் புதுக்கவிதை எழுதமுடுயும்.
என்னை எல்லோரும் திரைக்கதையில் மன்னன் என்கிறார்கள். நான் சிறப்பாக திரைக்கதை அமைப்பதற்கு தூயவன், கலைஞானம் போன்றவர்களை என்னுடன் வைத்துக் கொண்டதுதான் காரணம். அதனால்தான் ஜெயிக்க முடிந்தது.
இந்தப் படத்தின் இசையமைப்பாளர் கங்கை அமரனைப் பார்க்கும் போது எனக்கு பழைய நினைவுகள் வருகின்றன.
நான் முதன்முதலாக இயக்கிய 'சுவரில்லா சித்திரங்கள்' படத்துக்கு இசையமைத்தவர், கங்கை அமரன்தான். அந்த படம் வெற்றி பெற்றது. அடுத்து, என்னுடைய 'மவுனகீதங்கள்' படத்துக்கும் அவர்தான் இசையமைத்தார். அந்த படம் வெள்ளிவிழா கொண்டாடியது. பாடல்கள் படுபிரபலம்.
ஏவி.எம்.நிறுவனத்துக்காக, 'முந்தானை முடிச்சு' படம் செய்தபோது, இசையமைப்பாளராக கங்கை அமரனைத்தான் என்றேன் நான். ஏவி.எம். நிறுவனத்தினர், இளையராஜாவை இசையமைக்க வேண்டும் என விரும்பினார்கள். எனக்கு ராஜாகிட்ட போக தயக்கமாக இருந்தது. ஒரு கட்டத்தில், கங்கை அமரனே என்னிடம் வந்து, 'இந்தப் படத்துக்கு அண்ணன் இசையமைக்கட்டும். நான் அடுத்த படத்துக்கு பண்ணுகிறேன்', என்றார்.
ராஜாவின் கோபம்...
நான், இளையராஜாவிடம் சென்று இசையமைக்கக் கேட்டேன். 'நீ, அமரன் பெயரைத்தானே சிபாரிசு செய்தாய். இப்போ நான் எதுக்கு... அமரே பண்ணட்டும், போய்யா' என்றார். 'அமரன் யார், ஆப்பிரிக்காக்காரரா, உங்க தம்பிதானே...' என்று அவரை சமாதானம் செய்வதற்குள் போதும்...போதும்...என்றாகி விட்டது. ஆனால் இதெல்லாம் ஒரு சுவையான அனுபவங்களாக அமைந்தன. எப்பேர்ப்பட்ட ஜாம்பவான்களிடம் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என நினைத்து பெருமைப்படுகிறேன்...', என்றார்.
மகேந்திரன்
இயக்குநர் மகேந்திரன் பேசுகையில், எவ்வளவு பெரிய படம், நட்சத்திரங்கள் நடித்தாலும் திரைக்கதை சரியாக இல்லாவிட்டால் படம் வெற்றிபெற முடியாது, என்றார்.
நடிகர் மோகன், கவிஞர்கள் நா.முத்துக்குமார், விவேகா, இசையமைப்பாளர் கங்கை அமரன், ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங், 'ஆயிரத்தில் ஒருவன்' பட அதிபர் ரவீந்திரன் ஆகியோரும் பேசினார்கள்.
'புகைப்படம்' படத்தின் தயாரிப்பாளர் என்.சி.மணிகண்டன் வரவேற்று பேசினார். இயக்குநர் ராஜேஷ்லிங்கம் நன்றி கூறினார்.