தமிழன் என்பது ஒரு தகுதியோ ஏணியோ அல்ல…அது ஜஸ்ட் ஒரு அடையாளம்தான். திறமை மட்டுமே பேசும். அடையாளம் திறமையோடு ஒட்டிக் கொண்டு வந்துவிடும், என்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
தனது அடுத்த வெளியீடான உன்னைப்போல் ஒருவன் படத்தை யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் கமல். மலையாளத்தின் முன்னணி நடிகர் மோகன்லாலுடன் முதல்முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் கமல்.
இந்தப் படத்தின் முறையான அறிமுக விழாவை வெள்ளிக்கிழமை நடத்திய கமல், படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் இயக்குநர் சக்ரி, எழுத்தாளர் ஈரா முருகன் (திரைக்கதை - வசனம்), கவிஞர் மனுஷ்யபுத்திரன் (பாடலாசிரியர்) ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் கமல் பேசியதாவது:
இந்தப் படத்தின் கதை ‘எ வெட்னஸ்டே’ என்ற இந்திப் படத்தினுடையதுதான். ஆனால் நல்ல கதையை எங்கிருந்து வேண்டுமானாலும் பெறலாம். அதற்கு மொழி கிடையாது.
இப்படத்தில் வசனகர்த்தாவாக இரா.முருகன், பாடல் ஆசிரியராக மனுஷ்யபுத்திரன் ஆகிய இரு இலக்கியவாதிகளை அறிமுகம் செய்கிறேன்.
இந்தப் படத்தின் இயக்குநர் சக்ரி, நான் நடித்த சலங்கை ஒலியில், தப்புத்தப்பாக போட்டோ எடுக்கும் ஒரு சிறுவனாக நடித்தார். பின்னர் ஹாலிவுட்டில் போய் சரியாக படமெடுப்பது எப்படி என்று கற்றுக் கொண்டு வந்துவிட்டார் போலும்… என் படத்துக்கே இயக்குநர் ஆகியுள்ளார்.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் படத் தலைப்புதான் இது. அந்த மேதைக்கு என்னால் செலுத்த முடிந்த மரியாதையாக இநதப் படம் இருக்கட்டும் என்றுதான் இந்தத் தலைப்பைச் சூட்டினோம். தலைவன் இருக்கின்றான் என்ற டைட்டிலும் எங்களிடம்தான் உள்ளது. அப்பெயரில் வேறு படம் எடுப்போம்.
ஈழத் தமிழர் நிலை வருத்தம் அளிக்கிறது. அங்கு அமைதி ஏற்பட வேண்டும். திரையுலகம் அதற்கு என்ன செய்துவிட முடியும்… இது பேசிக்கொண்டிருக்கும் விஷயமல்ல. செயலில் இறங்கி உடனடியாத நிறுத்த வேண்டிய விஷயம். அதற்கான முயற்சிகளை யார் செய்ய வேண்டுமோ அவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். நல்ல தீர்வு வரும்.
ஈழத்தமிழர் வாழ்க்கையை படமாக எடுக்க ஆசைதான். ஆனால் அதற்கான தைரியம்தான் இல்லை. ஏன் தைரியம் இல்லை என்பதை நிருபர்களாகிய நீங்கள் உங்களுக்குள்ளேயே கேட்டுப் பாருங்கள்.
நான் தமிழன்தான். ஆனால் தமிழன் என்பது எனக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. தமிழன் என்பது ஒரு அடையாளம். உயர்ந்த நிலையை அடைவதற்கான தகுதியல்ல. தமிழனுக்கு மட்டுமல்ல… வேறு இனத்துக்கும்கூட அது பொருந்தும் என்றே நம்புகிறேன். திறமை இருந்து அந்தத் துறையில் ஒருவர் பளிச்சிட்டால், அடையாளம் கூடவே ஒட்டிக் கொள்ளும். நான் இதை எந்த மேடையிலும் சொல்வேன்.
இந்தக் கதையில் நடிக்க இரு பெரிய நட்சத்திரங்கள் எதற்கு என்று கேட்பதற்கு என்னிடம் பதில் இல்லை. காரணம், முதலில் நாங்கள் நடிகர்கள். உங்களால் நட்சத்திரங்களாக்கப்பட்டவர்கள். நட்சத்திரமானது எங்கள் தப்பா… நட்சத்திரங்கள் ஆகிவிட்டதால் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்கக் கூடாதா?
பொன்விழா படமா?
நான் திரையுலகுக்கு நடிக்க வந்தது ஆகஸ்ட் 12, 1959-ல். இது என்னுடைய திரை வாழ்க்கையின் 50 வது வருடம். உன்னைப்போல் ஒருவன் படத்தில் நானும் மோகன்லாலும் சேர்ந்து வரும் காட்சிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. வரும் மே மாதத்துக்குள் முழுமையாக முடிந்துவிடும்.
ஜூலையில் வெளியிடும் திட்டம் உள்ளது. ஆனால் நண்பர்களும், ரசிகர்களும் இந்தப் படத்தை என்னுடைய பொன்விழாப் படமாக வெளியிட விரும்புகிறார்கள். எனவே ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியிடவும் ஒரு எண்ணம் உள்ளது… பார்க்கலாம்.
ஸ்ருதி ஏன்?
ஸ்ருதியின் இசையில் எனக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்ட பிறகுதான் அவரை இசையமைப்பாளராக இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்தோம். மகள் என்ற பாசத்தில் அல்ல. மூன்று பாடல்கள். மூன்றுமே சிறப்பாக வந்துள்ளன, என்றார் கமல்.
மோகன்லால் பெருமிதம்!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப்படம் நடிக்கிறார் மோகன்லால். அவர் கடைசியாகத் தோன்றிய தமிழ்ப்படம் பாப்கார்ன். அதற்குப் பிறகு அரண் என்ற படத்தில் அவர் நடித்தார். ஆனால் அது முழுமையான தமிழ்ப் படமல்ல.
பத்திரிகையாளர் சந்திப்புக்கு சென்னை வந்திருந்த மோகன்லால், பேசியதாவது:
கமல்ஹாசனின் தீவிர ரசிகன் நான். இப்போது அவருடன் இணைந்து படம் செய்வது மிகப் பெரிய கவுரமாகக் கருதுகிறேன். அவருடன் இருக்கும்போது நிறைய கற்றுக் கொள்ள முடியும்.
நல்ல கதைகள் மொழிகளைத் தாண்டியவை, இந்தப் படம் கேரளாவில் தமிழ் படமாகவே ரிலீசாகிறது.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், தமிழ்ப் படங்களை மலையாளிகள் மிகவும் விரும்பிப் பார்ப்பார்கள். தமிழ்ப் படங்களில் உள்ள உணர்வுகள் அவர்களுக்கு நன்கு புரியும். அடிப்படையில் இரு மொழிகளும் ஒன்றுதான், என்றார்.
தெலுங்கில் இந்தப் படத்துக்கு ஈநாடு எனப் பெயர் சூட்டியுள்ளனர்.