29 ஏப்ரல் 2009
ரசிகர்களை கவராத புதுப் படங்கள்!
இந்தக் கோடையின் முதல் வரவாக நான்கு படங்களை வெளியிட்டனர் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள். இந்த நான்கு படங்களுமே 'ஊற்றிக் கொண்டது' தான் தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மரியாதை, எங்க ராசி நல்ல ராசி, குரு என் ஆளு, குங்குமப் பூவும் கொஞ்சு புறாவும் என நான்கு படங்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசாகின.
முதல்நாளே இந்தப் படங்களுக்கான ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் படுமோசமாக இருந்ததாக கருத்து தெரிவித்தார் வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி சேகரன்.
சமீபத்தில் நடந்த குயிலு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய சேகரன், தமிழ்ப் படங்களின் வர்த்தகம், ரசிகர்களிடம் அவற்றுக்கான வரவேற்பு படுமோசமாக உள்ளதாகத் தெரிவித்தார்.
"எல்லாப் படங்களும் நன்றாக ஒட வேண்டும். அதற்கு சரியான திட்டமிடல் வேண்டும். அதேபோல திட்டமிட்டு ரிலீஸ் செய்ய வேண்டும். சரியான திட்டமிடல் இல்லாமல் இந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான மரியாதை, குங்குமப்பூவே கொஞ்சும்புறாவே, எங்கராசி நல்ல ராசி மற்றும் குரு என் ஆளு ஆகிய நான்கு படங்களுமே மக்களின் வரவேற்பைப் பெறத் தவறிவிட்டன. அதிலும் மரியாதை தவிர மற்ற படங்களுக்கு திரையரங்குகளில் இரட்டை இலக்கத்தைக் கூட தாண்டாத அளவுக்குத்தான் கூட்டம்.
மரியாதை படத்துக்கும் சொல்லிக் கொள்கிறமாதிரி இல்லை. நான் இந்தப் படங்களின் தரம் குறித்துப் பேசவில்லை. குறைந்தபட்சம் இவற்றை சரியான நேரத்தில் வெளியிட்டிருந்தால் சில தினங்களாவது ஓடியிருக்கும்... அதே நேரம் பல வாரங்களுக்கு முன் வெளியான அயன் திரைப்படம் இன்னும் அரங்கு நிறைந்த கூட்டத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இயக்குநர்கள் இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.