02 மே 2009
பிரஷாந்த் - கிரகலட்சுமி திருமணம் செல்லாது: குடும்ப கோர்ட் அதிரடி தீர்ப்பு
சென்னை: வேணு பிரசாத்தை முதல் திருமணம் செய்ததை மறைத்து பிரஷாந்த்தை கிரகலட்சுமி திருமணம் செய்து கொண்டது உறுதியாகியுள்ளது. எனவே பிரஷாந்த் - கிரகலட்சுமி திருமணம் செல்லாது. திருமணமே செல்லாது என்பதால் குழந்தைக்கு பிரஷாந்த் உரிமை கோர முடியாது என சென்னை குடும்ப நல நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
நடிகர் பிரஷாந்த்துக்கும், சென்னையைச் சேர்ந்த கிரகலட்சுமிக்கும் இடையே திருமணம் நடந்தது. இருவருக்கும் குழந்தையும் பிறந்தது.
குழந்தை பெற தாய் வீட்டுக்குச் சென்ற கிரகலட்சுமி பிரஷாந்த் வீட்டுக்குத் திரும்ப மறுத்ததால் குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினார் பிரஷாந்த்.
மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி அவர் மனு செய்தார். இதுதொடர்பா விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் திடீர் திருப்பமாக, தனது மனைவிக்கு ஏற்கனவே வேணு பிரசாத் என்பவருடன் திருமணம் நடந்து விட்டதாகவும், அதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றும் கூறி புதிய மனுவைத் தாக்கல் செய்தார் பிரஷாந்த்.
முதல் திருமணத்தை மறைத்ததோடு, அவரை விவாகரத்து செய்யாமலும் உள்ளார் கிரகலட்சுமி. எனவே எனக்கும், அவருக்கும் இடையே நடந்த திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும், கிரகலட்சுமியிடம் உள்ள குழந்தையை என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார் பிரஷாந்த்.
இந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதி அளித்த தீர்ப்பில்...
வேணு பிரசாத்தை கிரகலட்சுமி திருமணம் செய்து கொண்டது ஆதாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை மறைத்து பிரஷாந்த்தை கிரகலட்சுமி திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பதும் நிரூபணமாகியுள்ளது.
எனவே பிரஷாந்த் - கிரகலட்சுமி திருமணம் செல்லாது. திருமணமே செல்லாது என்று ஆகி விட்டதால் குழந்தைக்கு பிரஷாந்த் உரிமை கோர முடியாது. குழந்தை கிரகலட்சுமியிடமே வசிக்கும்.
திருமணம் செல்லாது என்று ஆகி விட்டதால் கிரகலட்சுமியின் விவாகரத்து கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த நிலையில் கிரகலட்சுமியிடமிருந்து விவாகரத்து கோரி வேணு பிரசாத் தாக்கல் செய்த மனு இன்னும் குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.