சினிமாவில் அசின் அறிமுகமாகற சீன்கள்லாம் கலர்ஃபுல்லாத்தானே இருக்கும். ஆனா.. 'அசினை பாப்பம்'னு ஆவலா கேரவான்ல உக்காந்திருந்த எனக்கு 'ஏ..வ்வ்வ்'ங்கிற ஒரு ஏப்பத்தோட அறிமுகமானார் அசின்!அசின் ஃபீவர் ஓவரா இருந்த சீஸன் அது. எடிட்டோரியல்ல ஆளாளுக்கு 'அசைன்மெண்ட் போறேன்'னு சொல்றதைக்கூட 'அசின்மென்ட்'னுதான் 'ஜொள்ளு'வாங்க.இப்படி பள்ளிக்கூட பாப்பா முதல் பல்லுப் போன தாத்தாவரை அத்தினிபேர் மனசிலும் பிசின் மாதிரி ஒட்டிக்கிட்டாங்க இந்த 'சித்தினி' வம்ச அசின்! கவர் ஸ்டோரிக்காக சந்திக்கப் போனேன். வாகினி ஸ்டுடியோவுல 'சிவகாசி' ஷ¨ட்டிங். ஸ்பாட்டுக்குப் போனா.. பஞ்சு மிட்டாய் கலர்ல பாவாடை தாவணி போட்டு அசின் விஜய்யை கொஞ்சிகிட்டிருந்தாரு.அசினோட அசிஸ்டண்ட் வந்து 'கேரவான்ல வெய்ட் பண்ணுங்க. மேடம் வந்துடுவாங்க!'னு சொல்ல உள்ள போயி ஜில்லுனு உக்காந்தேன். டோர் திறந்தது. 'அசின் வர்றாப்ல'னு ஆவலா எட்டி பாத்த எனக்கு.. 'தூர்வாராத கெணத்துல விழுந்து துருப்பிடிச்ச ஸ்பீக்கர்' சவுண்டுல ''ஏ..வ்வ்வ்''னு ஒரு ஏப்பம் மட்டுமே முதல்ல வர.. அதே செகண்ட்ல அசின் உள்ளே வந்தாங்க.''சத்தியமா அசின் குரல் இப்படி 'ட்ரிபிள் கரகரப்பா' இருக்காதே'னு யோசிச்சப்பதான் அடுத்த 'ஏ..வ்வ்வ்'வை அதே எஃபெக்ட்ல ஏவி விட்டபடி உள்ள வந்தாரு அசினோட அப்பா ஜோசப் தோட்டம்கல். மின்னலா என்னைப் பாத்து சிரிச்ச அசின்.. அப்படியே சன்னமா மலையாளத்துல அப்பாவைத் திட்ட ('ஏவ்'க்கு ஆப்பு!) ''ஓகே மோளே!''னு அவர் சிரிச்சு சமாளிச்சாரு. அப்பதான் ஒரு விஷயத்தை கண்டுபிடிச்சேன். அசினுக்கு மீசை, தாடி வெச்சா.. அப்படியே அவங்க அப்பா! அவர் மழிச்சா அச்சுஅசலா அசின்!அசிஸ்டண்ட் ஆரஞ்சு ஜூஸ் தர வாங்கி கையில வெச்சுகிட்டு, ''உங்களப் பத்தி கேள்விப்படற நியூஸ் எல்லாமே ரொம்ப ஆச்சர்யப்படுத்தற மாதிரி இருக்கே?''ன்னேன். 'ஆ'னு அழகா ஆச்சர்யப்பட்ட அசின் ''அப்படியென்ன கேள்விப்பட்டீங்க! சொல்லுங்க ப்ளீஸ்''னாங்க.''அசினுக்கு எக்கச்சக்க பிஸினஸ் இருக்கு. உங்க பேர்ல ஒரு அணைக்கட்டே இருக்குன்னு நியூஸ் வருதே! உண்மையா?''னு கேட்டேன். 'பளிச்'னு சிரிச்ச அசின் ''நீங்க கேள்விப்பட்டது நிஜம்தான். இதுக்கான பதிலை நான் சொல்றதைவிட என் டாடி சொன்னா கரெக்டா இருக்கும்''னு சொல்லிட்டு 'டாடியை' பார்க்க.. தாடியை வருடிகிட்டே மீதியை அவர் சொன்னார்..''ஞான் வந்து.. தோட்டம்கல் பேர்ல எஸ்டேட், ஜூவல்லரி, சிட்ஸ் அன்டு இன்வெஸ்ட்மெண்ட், ரெடிமேட்ஸ், டிராவல்ஸ், ஹெச்.பி, ஐ.ஓ.சி, டீலர்ஷிப், டூரிஸ்ட் ஹோம், கேரளா ரோடு லைன்ஸ், வாட்ச் ஹவுஸ், நர்சரி, ஷாப்பிங் மால். (இத பார்ரா.. ஒரு பிசினஸ்கூட தமிழ்ல இல்ல!) இப்படி டஜன் கணக்கில் பிஸினஸ் பண்றோம்.'' மூச்சுவிடாமல் ஜோசப் சொல்ல.. மூச்சு வாங்கிச்சு எனக்கு.''பொதுவா எந்த நடிகருக்கு கம்பெனி குடுக்கலாம்னு யோசிக்கிற சில நடிகைகள் மத்தியில.. இத்தனை கம்பெனிகளை வெச்சிருக்கற ஒரே நடிகை நீங்கதான் போல!''னு நான் சொன்னதும் அசின், அப்பா ரெண்டுபேர் முகத்திலும் 'கதகளி' களிப்பு.ஆரஞ்சு ஜூஸை ஒரு 'சிப்' சிப்பலாம்னு எடுத்த நொடியில.. அசின் குறுக்கிட்டு ''இத்தனை கம்பெனிகளுக்கும் யார் எம்.டி. தெரியுமா? நான்தான்''னு குஷியா சொல்ல.. ''என்ட மோளே..!''னு மகளை உச்சிமோந்து ஜோசப் மலையாளத்தில் பறைய அசின் உருக.. ஃபீலிங்கில் கூலிங் போன ஜூஸை உறியாமலே வெச்சிட்டேன்.''சரி.. நிஜம்மாவே உங்க பேர்ல அணைக்கட்டு இருக்கா?''னு கொக்கியை போட்டேன். ''ஹைய்யோ''னு 'சிக்கிமுக்கி கல்லா' சிரிச்ச அசின் ''நீங்க நெனைக்கற மாதிரி பிரம்மாண்டமான டேம் கிடையாது அது. எங்க வீட்டுக்கிட்டே எங்க தேவைக்காக கட்டியிருக்கற சின்ன டேம் அது!''னு தன்னோட கையால அவர் காட்டின சைஸைப் பாத்தா.. நம்ம வீட்டு தண்ணித் தொட்டி மாதிரி இருந்துச்சு.இப்படியாக அசினுக்கும், அப்பாவுக்கும் என்னை ரொம்பவே பிடிச்சுப் போச்சு. 'இனி எங்க ஃபேமிலில நீங்களும் ஒருத்தர்'னு ரேஷன் கார்டுல பேர் சேர்க்காத குறையா பாசம் காட்டினாங்க.பேட்டி அச்சேறி.. 'குங்குமம்' கடைக்கு வந்திருச்சு. அட்டையை அலங்கரிச்சது அசின் படம்தான். ஆனா, கவர் ஸ்டோரியா வந்தது.. ''வைரஸ் நோய்களைப் பரப்பும் வாட்டர் பாக்கெட்''னு நான் எழுதின வேற ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!புக்கை பார்த்துட்டு அசின் அப்பா அலறியடிச்சு என் 'செல்'லுக்கு வந்தாரு.''எந்தா சாரே.. அட்டைல என் டாட்டர் ஃபோட்டோ போட்டுட்டு.. கீழே ''வைரஸ் நோய் பரப்பும்'னு ஏதோ வாட்டர் மேட்டர் போட்டிருக்கீங்க! டிவியில விளம்பரம், ஊரெல்லாம் போஸ்டர்! இப்படி பண்ணியாச்சே நீங்கள்? என் டாட்டர் ஃப்யூச்சர் என்னாகறது?''னு ரத்தக்கண்ணீர் வடிச்சாரு.''சார்.. வைரஸ் நோய்கள பரப்புறது வாட்டர் பாக்கெட்தான்! அசின் இல்ல சார்!''னு அவருக்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்.. தோட்டம்கல் 'வாட்டம்கல்'லாவே வருத்தப்பட்டாரு.அசின் வீட்டு ரேஷன்கார்டுல சேர்க்கப்படவேண்டிய என் பேரு இப்படி மோசம் போனதை நெனச்சு நீங்க சிரிச்சுராதீங்க ப்ளீஸ்!ஏ..வ்வ்வ்!