19 ஏப்ரல் 2009
இன்னலில் ஈழத் தமிழர்கள-பிறந்த நாளை ரத்து செய்தார் அஜீத்
ஈழத் தமிழர்கள் பெரும் இன்னலில் உள்ள நிலையில் தான் இந்த ஆண்டு பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை என்று நடிகர் அஜீத் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் ஆகியோர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிறந்த நாள் கொண்டாட்டங்களை ரத்து செய்தனர்.
அதேபோல முதல்வர் கருணாநிதி, அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோரும் பிறந்த நாள் கொண்டாட்டங்களை ரத்து செய்தனர்.
இந்த வரிசையில் தற்போது அஜீத்தும் இணைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அசல் திரைப்பட தொடக்க விழாவில் நேரில் கலந்து கொண்டும், தொலைபேசி மூலமாகவும், தலைமை இயக்கத்தின் மூலமாகவும் வாழ்த்து சொன்ன ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி.
வரும் மே 1 ந் தேதி எனது பிறந்தநாள். இதையொட்டி எனது ரசிகர்கள் அந்நாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருவதாக ஒரு செய்தி என் கவனத்திற்கு வந்தது. உங்கள் அன்புக்கு நன்றி.
நான் உங்கள் உற்சாகத்திற்கு தடை போடுவதாக எண்ண வேண்டாம். இலங்கையில் நம் சக தமிழர்கள் இன்னல்களுக்கும், இடர்ப்பாடுகளுக்கும் இடையே சிக்கித் தவிக்கின்ற இந்த நேரத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடுவது மனித நேயத்திற்கு முரண்பாடானது என்று கருதுகிறேன்.
மேலும் பொதுத் தேர்தல் நடந்து கொண்டிருக்கிற இந்நேரத்தில் நம்மால் எந்தவிதமான இடையூறும் இருந்து விடக் கூடாது என கருதுகிறேன்.
மேலும் இம்மாத இறுதியில் நான் படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல இருப்பதால் ரசிகர்கள் நேரில் வந்து வாழ்த்து சொல்வதை தவிர்த்து நம் நற்பணி இயக்கத்தின் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு தலைமைக்கு ஒத்துழைப்பு அளிக்க கோருகிறேன் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.