Saturday, 18 April 2009 23:58 |
கேப்டவுன் : நடப்பு சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 58 ரன்களில் சுருட்டி, 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி. கேப்டவுனில் இன்று நடந்து முடிந்த இரண்டாவது ஐபிஎல் 2009 போட்டியில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில், 134 ரன்கள் என்ற இலகுவான வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் பந்துவீச்சால் நிலை குலைந்து போனது. அந்த அணி 15.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 58 ரன்களையே எடுத்தது. இதுவே, ஐ.பி.எல். போட்டிகளில் ஓர் அணி எடுத்த மிகக் குறைந்த ரன்கள் ஆகும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஹாண்டர்ஸன், யூசுப் பதான் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 11 ரன்கள் எடுத்தனர். ஏனையோர் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்தனர். பெங்களூர் ராயல்ஸ் சாலஞ்சர்ஸ் தரப்பில், அனில் கும்ப்ளே 5 விக்கெட்டுகளையும், பிரவிண் குமார் மற்றும் வினய் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முன்னதாக, பீட்டர்சன் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. துவக்க ஆட்டக்காரர் ரைடர் பூஜ்ஜியத்தில் வெளியேற, அடுத்த பந்திலேயே டெய்லர் அதே பூஜ்ஜிய ரன்களில் பெவிலியன் திரும்பினார். உத்தப்பாவும் மூன்றே ரன்கள் மட்டுமே எடுத்தார். பீட்டர்சன் 30 பந்துகளில் 32 ரன்கள் என்ற பொறுப்புணர்வுடன் விளையாடி ஆட்டமிழந்தார். தனக்கு இணையாக இருந்து விளையாடும் சக வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான ரன்களிலேயே வெளியேற, பவுலர்களை இணையாக வைத்துக் கொண்டு அதிரடியாக ரன் குவித்தார் டிராவிட். கடைசி ஓவரின் 4-வது பந்து வரை களத்தில் இருந்த அவர் 48 பந்துகளைச் சந்தித்து 66 ரன்களைக் குவித்து ஓரளவு சமாளிக்க கூடிய அளவிலான இலக்கை எட்ட வழிவகை செய்தார். ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ்சின் மோசமான ஆட்டத்தால், பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 2008 ஐ.பி.எல். சாம்பியன் அணியான வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, கடந்த முறை கடைசி இடத்துக்கு ஒரு படி மேலே இருந்த பெங்களூர் அணி துவம்சம் செய்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, இன்று நடந்து முடிந்த முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. |