நடிகர் ஜெயம் ரவி காதல் திருமணம் செய்து கொள்கிறார். மணமகள் ஒரு பட அதிபரின் மகள் ஆவார். இது பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெறும் காதல் திருமணம் ஆகும்.
ஜெயம்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ரவி. இவர், பிரபல தயாரிப்பாளர் எடிட்டர் மோகனின் இளைய மகன் ஆவார். ஜெயம் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜெயம் ரவி என்று அழைக்கப்படுகிறார்.
எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தீபாவளி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம் உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்போது, ஜனநாதன் டைரக்டு செய்யும் பேராண்மை' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
ஜெயம் ரவிக்கும், ஸ்காட்லாந்தில் பட்டப்படிப்பு படித்து வரும் ஆர்த்திக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் 2 ஆண்டு நண்பர்களாக பழகி வந்தனர். பின்னர் இவர்களது நட்பு காதலாக மலர்ந்தது. இதுகுறித்து தந்தை மோகனிடம் ஜெயம் ரவி தெரிவித்தார். அவரும் ரவியின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார். ‘வீராப்பு’ என்ற படத்தை தயாரித்த விஜயகுமாரின் மகள் ஆர்த்தி. இவர் இப்போது சென்னையில் வசிக்கிறார். இரு வீட்டாரும் பேசி திருமணத்தை முடிவு செய்தனர்.
ஜெயம் ரவி இப்போது நடித்து கொண்டிருக்கும் பேராண்மை படம் முடிவடைந்ததும், அவருக்கும், ஆர்த்திக்கும் திருமணம் நடைபெறும் என்று எடிட்டர் மோகன் தெரிவித்தார்.