இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகம்மது அசாருதீன் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். வரும் தேர்தலில் அவர் ஆந்திராவில் இருந்து போட்டியிடுவார் என்று தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக திகழந்தவர் அசாருதீன். பீல்டிங்கில் அபாரமாக விளங்கிய அவர், இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
பின்னர் கிரிக்கெட் சூதாட்ட புகாரில் மாட்டிக் கொண்ட அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பதாக அக்கட்சியின் ஆந்திர மாநில பொறுப்பாளரும் முன்னாள் கர்நாடக முதலமைச்சருமான வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
அசாருதீன் கட்சியில் இணைந்ததை இன்று அறிவித்த மொய்லி, அவர் விரைவில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க இருப்பதாக கூறினார்.
அசாருதீன் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, எந்த நிபந்தனையும் இன்றி அவர் கட்சியில் இணைந்திருப்பதாக கூறிய மொய்லி, அவர் போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.