சுசி கணேசனின் கந்தசாமியிலிருந்து சத்தமில்லாமல் கழட்டிவிடப்பட்டுள்ளார் காமெடியன் விவேக். அவருக்கு பதில் இப்போது வடிவேலு நடிக்கிறார்.
கவுண்டர் அமைதியாக ஒதுங்கிவிட்ட பிறகு, மதுரை மண்ணின் மைந்தர்களான வடிவேலுவுக்கும் விவேக்குக்கும் தமிழ் நகைச்சுவை நடிகர்களில் முதலிடம் யாருக்கு என்பதில் அறிவிக்கப்படாத ஒரு பனிப்போரே நடந்து வருகிறது.
ரிலீசாகிற படங்களுக்கேற்ப சில வேளைகளில் விவேக் கொடி பறப்பதும், பெரும்பாலும் வடிவேலு கை ஓங்குவதுமாக காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. சிவாஜி படத்தில் கிடைத்த பெயரை தக்க வைத்துக் கொள்ளும்படி விவேக் சுவாரஸ்யமான வேடங்கள் எதையும் செய்யவில்லை. படிக்காதவன் படத்தில் வடிவேலு நீக்கப்பட்ட, அவருக்கென்றே எழுதப்பட்ட காமெடி போர்ஷனில் விவேக் நடித்தார். ஆனால் அது அந்த அளவு எடுபடவில்லை.
இருந்தாலும் வடிவேலு கால்ஷீட் கிடைக்காத கோபம், உச்சத்துக்குப் போய்விட்ட அவரது சம்பளம் காரணமாக, விவேக்குக்கு பல வாய்ப்புகள் கிடைத்துவந்தன.
இப்போது நிலைமை அப்படியே தலைகீழ். விவேக்குக்கு பதில் பல படங்களில் வடிவேலுவையே ஒப்பந்தம் செய்கிறார்கள், அதிக பணம் செலவானாலும் பரவாயில்லை என்று.
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் விக்ரம் நடிக்க, சுசி கணேசன் இயக்கும் கந்தசாமியில் ஆரம்பத்தில் ஒப்பந்தமானவர் விவேக்.
ஆனால் இப்போது படத்திலிருந்து அவர் கழற்றிவிடப்பட்டுள்ளார். அந்த வேடத்தில் நடிக்கப் போகிறவர் வடிவேலு.
விக்ரம்- வடிவேலு காமெடி இந்தப் படத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக இருக்கும். மற்றபடி விவேக் நடிக்காததற்கு சிறப்புக் காரணங்கள் எதுவுமில்லை என்று பதில் கூறுகிறார் சுசி கணேசன்.
வடிவேலு புதிதாக ஒப்பந்தமாகியுள்ள இன்னொரு பெரிய படம் ஆதவன். குருவி படத்தைத் தயாரித்த உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இந்தப் படத்திலும் முதலில் நடிக்கவிருந்தவர் விவேக்தான்.