லிங்குசாமி இயக்கும் புதிய படம் பையா. இதை அவருடைய சகோதரர் சுபாஸ் சந்திரபோஸ், திருப்பதி பிரதர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இதில் நாயகனாக பருத்திவீரன் கார்த்தி நடிக்கிறார். நயன்தாராவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து, அதில் ரூ.15 லட்சம் முன்பணமாகவும் கொடுத்திருந்தார் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ்.
இந்நிலையில், தான் கொடுத்த கால்ஷீட் தேதிகளின்படி படப்பிடிப்பைத் தொடங்கவில்லை; அதனால் பையா படத்திலிருந்து விலகுகிறேன் என நயன்தாரா தெரிவித்தார். படத்தில் நடிக்காததால் தாங்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கேட்டது தயாரிப்பு தரப்பு. ஆனால் அட்வான்ஸ் தொகையைத் திருப்பிக் கொடுக்க மாட்டேன் என்றும், இத்தனை நாட்கள் இழுத்தடித்தற்காகவும், கால்ஷீட்டை வீணடித்தற்காகவும் சரியாகப் போய்விட்டது போய் வாருங்கள் என்று கூறிவிட்டார் நயன்தாரா.
இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலும் தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் இரு தரப்பினரும் புகார் அளித்தனர். அதன்படி இரண்டு சங்கங்களின் கூட்டமைப்பும்ஆலோசனை நடத்தியது.
ஒரு படத்துக்காக தயாரிப்பாளரிடமிருந்து நடிகர்-நடிகையர் முன் பணம் வாங்கியிருந்து, அதில் ஒரு நாளாவது நடித்திருந்தால் அந்த முன் பணத்தைத் திருப்பித் தரவேண்டியதில்லை என இரு சங்கங்களும் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ளன. ஆனால் நயன்தாரா இந்தப் படத்தில் ஒரு நாள் கூட நடிக்கவில்லை.
இதை மேற்கோள்காட்டி, தான் வாங்கிய முன் பணத்தை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் திருப்பித் தர வேண்டும் என இரு சங்கங்களும் இரண்டு மாதங்களுக்கு முன்னரே நயன்தாராவிடம் தெரிவித்தன. ஆனால் காலக்கெடு நெருங்கியும் அட்வான்ஸ் தொகையை திருப்பித் தர மாட்டேன் என நயன்தாரா தகவல் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து நயன்தாராவை இனி தமிழ்ப் படங்களில் ஒப்பந்தம் செய்யக்கூடாது; மேலும் மற்ற மொழிப் படங்களிலும் அவரை நடிக்க வைக்கக் கூடாது என அந்தந்த தயாரிப்பாளர் சங்கங்களில் பேசுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கமும் நடிகர் சங்கமும் இணைந்து புதன்கிழமை நடத்திய கூட்டுக் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை அனைத்துத் தயாரிப்பாளர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அனைத்து தென்னிந்திய மொழிகளிலும்…
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் எடுத்துள்ள இந்த முடிவை அனைத்து தென்னிந்திய மொழிப் பட தயாரிப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ளதாகவும், இதனை அனைவரும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
என்னிடம் விசாரிக்காமலேயே தீர்ப்பா?- நயன்
இந்தப் பிரச்னை நயன்தாராவிடம் கேட்டோம்:
படத்துக்காக அட்வான்ஸ் தொகையை வாங்கியது உண்மைதான். அட்வான்ஸ் தொகையைத் திருப்பித் தர மாட்டேன் என்று கூறியதும் உண்மை. நான் மறுக்கவில்லை. இந்தப் படத்துக்காக நான் கொடுத்த கால்ஷீட் தேதிகளைத் தயாரிப்பாளர் பயன்படுத்தவில்லை.
எனக்கு வந்த மற்ற பட வாய்ப்புகளையும் மறுத்துவிட்டு இந்தப் படத்துக்காகக் காத்திருந்தேன். ஆனால் படப்பிடிப்பையே தொடங்கவில்லை. அதனால் எனக்குத்தான் இழப்பு. இதுகுறித்து பல பத்திரிகைகளில் செய்திகளும் வெளியாகியுள்ளன. மேலும் இந்தப் பிரச்னையில் நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் இதுவரை என்னை நேரடியாக அழைத்து விசாரிக்கவில்லை. என் தரப்பு நியாயத்தை முறைப்படி தெரிவிப்பேன், என நயன்தாரா தெரிவித்துள்ளார்.
எதனால் பிரச்சினை?
நயன்தாரா இப்போது தமிழில் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் ரூ.1 கோடிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.
பையா படத்தின் உண்மையான பிரச்சினை இந்த அட்வான்ஸ் கிடையாது, சம்பள விவகாரம்தான்.
இந்தப் படத்துக்காக நயன்தாராவுக்குப் பேசப்பட்ட சம்பளம் ரூ.1.10 கோடி என்கிறார்கள். ஆனால் நயன்தாரா நடித்த 3 படங்கள் வரிசையாக தோல்வியடைந்தன. எனவே பேசிய சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு குறைத்துக் கொள்ளுமாறு தயாரிப்பாளர் கேட், நயன் அதற்கு மறுக்க, பிரச்சினை இப்போது ‘ரெட்கார்டில்’ வந்து நிற்கிறது!