ஐ.பி.எல்லில் ஆறும் நான்குமாகவே அடித்த தினேஷ்  கார்த்திக், ரெய்னா, முரளி விஜய் போன்ற வீரர்கள் சிம்பாபே தொடரில் சாதிக்காமல்  போனதற்கு என்ன காரணம் என யோசித்து பார்த்தால், டுவென்டி டுவென்டி ஒரு முழுமையான  கிரிக்கட் வடிவமல்ல. அது இன்ஸ்ட்ண்ட் நூடுல்ஸ் போன்றது. அவசரத்துக்கு  சாப்பிடலாம் எனினும் தொடர்ந்து அதை கொண்டு பசியாற முடியாது.
 எதிர்கால சிறந்த கிரிக்கட் வீரர்களை உருவாக்க வேண்டுமானால் சிறிய வயதில்  அவர்கள் 50 ஓவர் போட்டிகளில் விளையாடுவதை குறைக்க வேண்டும் என எங்களது பாடசாலை  கிரிக்கட் பயிற்சியாளர் அந்த காலத்தில் சொல்லிய விடயம் எவ்வளவு உண்மை என்பதை  மறுக்கவியலாது. 50 ஓவர் போட்டிகளே இப்படியாக மாறினால் 20 ஓவர் போட்டிகளின் அவர்களை  எவ்வாறு மாற்றிவிடும் என யோசிக்க தோன்றுகிறது.
 ஆறு, நான்கு அடிப்பதுதான் துடுப்பாட்டமும், துடுப்பாட்ட வீரர்களை ஓட்டங்களை  எடுக்கவிடாமல் கட்டுபடுத்துவதுதான் பந்துவீச்சும் என விளையாடும் 20-20 போட்டிகள் 25  வருடங்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டிருந்தால் இன்று சச்சின் டெண்டுல்கார்,  சங்கக்கார, அரவிந்த டீ சில்வா, கவாஸ்கர், டிராவிட், லாரா போன்ற துடுப்பாட்ட  வீரர்களும் முரளிதரன், கபில்தேவ், சேர். ரிச்சர்ட் ஹாட்லி, வசீம் அக்ரம், இம்ரான்  கான் போன்ற பந்து வீச்சாளர்களும் உலகத்திற்கு கிடைக்காமல் போயிருப்பார்கள். 
 இந்தியா இத்தொடரில் இறுதி போட்டிக்கு செல்லாமல் வெளியேறியது மற்ற எல்லா  நாடுகளை விடவும் இந்தியாவிற்கு இது பெரிய ஒரு அபாய அறிவிப்பு மணி என எடுத்து  கொள்ளலாம். காரணம் ஐ.பி.எல் என்னும் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறியாக கொண்டுள்ள  தொடர் முழுக்க முழுக்க இந்திய கிரிக்கட் சபையால் நடாத்தப்படுவதாலாகும். 
 இரண்டாம் தர இந்திய அணியை அனுப்பியதால் தோல்வியுற்றோம் என சப்பை காரணம் இந்திய  தெரிவாளர்களால் சொல்ல முடியாது ஏனெனில், இத்தொடரில் இந்தியாவை இருமுறை தோலவியுற  செய்த சிம்பாபே அணியின் வீரர்களை பார்க்கும் போது, இத்தொடரில் விளையாடிய பல இந்திய  வீரர்கள் சர்வதேச போட்டிகளில் அனுபவம் உள்ளவர்களே ஆகும். மேலும் இந்திய கிரிக்கட்  சபையின் சொத்தின் ஐநூறில் ஒரு பங்கு கூட இல்லாத சிம்பாபே கிரிக்கட் சபையின்  கிரிக்கட் கட்டமைப்பு உலகறிந்ததே. எனவே உள்நாட்டு கிரிக்கட் போட்டிகளிற்கு பயிற்சி  பெறவே சிறந்த கட்டமைப்பு இல்லாத சிம்பாபே அணி இந்திய இளம் வீரர்களை (அனைவரும்  ஐ.பி.எல் போட்டிகளில் திறமை காட்டிய வீரர்கள்) கொண்ட அணியை வெற்றி கொண்டதற்கு  முக்கிய காரணமாக நான் காண்பது, இன்னமும் 20-20 மோகம் சிம்பாபே அணிக்கு ஏற்படவில்லை  என்பதாகும். இன்னமும் 20-20 போட்டிகளை ஐசீசீ ஆதரித்து வளர்த்தெடுத்தால் கிரிக்கட்  இன்னும் பாதாளத்தை நோக்கியே விழும். 
 
நல்ல வேளை சச்சின் தெண்டுல்கார் 20-20 சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு  பெற்றுவிட்டார். யோசிக்க தெரிந்த அந்த வீரர் தொடர்ந்து சிறப்பாக விளையாட கூடிய  மனநிலையை தொடர்ந்து தக்கவைத்து கொள்ளவெ அந்த முடிவை எடுத்திருப்பார் என  நினைக்கிறேன்.
 முன்னொரு போதும் இப்படியான பதிவெழுதிய போது, இந்திய கிரிக்கட் சபை மீது கொண்ட  பொறாமையால்தான் இவ்வாறு எழுதினேன் கருத்து தெரிவித்த நண்பர்கள் இப்போது என்ன சொல்ல  போகிறார்கள்?
 இலங்கை அணிக்கு இந்திய அணியின் தோல்வியிலிருந்து படிக்க வேண்டிய விடயங்கள்  ஏராளமாக உள்ளன. இந்த இலங்கை அணி ஒரு அவுஸ்திரேலியா இளம் அணியிடம்  விளையாடியிருந்தால் முடிவு வேறுவிதமாக கிடைத்திருக்கலாம். எளியவர்களின் கூட்டத்தில்  வலியவனாக இருக்கும் இலங்கை வீரர்களில் பலரும் 20-20 மோகத்திற்கு உட்பட்டவர்களே.  எனக்கு தெரிந்து இலங்கை கிரிக்கட் சபை இலங்கை வீரர்களை ஐ.பி.எல் போன்ற  வெளிநாட்டு 20-20 போட்டி தொடர்களில் விளையாடுவதை தடுக்க முயல வேண்டும்.  பணக்கார இந்திய கிரிக்கட் சபைக்கு எதிராக சுண்டைக்காய் கிரிக்கட் சபையான இலங்கை  கிரிக்கட் சபைக்கு இது முடியுமான காரியமா என தெரியவில்லை? கவுண்டி போட்டிகளில்  விளையாண்டு தனது துடுப்பாட்டத்தை மெறுகேற்றிய அரவிந்த டீ சில்வா போன்ற வீரர்கள்  விளையாண்ட போட்டி தொடரல்ல வெளிநாட்டு 20-20 கிரிக்கட் லீக்குகள். 
 இலங்கை பாடசாலை மட்ட கிரிக்கட் போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை, அவற்றின்  தரமும் அவ்வாறே. அதை நேற்று வந்த தினேஷ் சந்திமால் தொடக்கம் அந்த கால அர்ஜுன  ரணதுங்க வரை நிரூபித்திருக்கிறார்கள். இப்பாடசாலை விளையாட்டுகளின் தரத்தை தொடர்ந்து  பேண வேண்டுமானால் பாடசாலைகளில் 20-20 கிரிக்கட் போட்டிகளை தடை செய்ய  வேண்டும்.
 20-20 போட்டிகள் எப்பவாவது விளையாண்டால் அது ஏற்று கொள்ள கூடிய விடயம் தான்  ஆனால் எந்நாளும் அதை விளையாடுவதை, அதற்காக டெஸ்ட் போட்டிகளை எதிர்கால கிரிக்கட்  அட்டவணையிலிருந்து ஒதுக்குவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். இன்னமும் டெஸ்ட்  போட்டிகள் தான் சிறந்த வகை கிரிக்கட் போட்டிகள் என்பதை நம்புகிறேன்.
நன்றி :-யோ வொய்ஸ் 
