‘நண்பராக ஏற்றுக் கொள்ளச் சொல்லி எனக்கு எக்கச்சக்கமான அழைப்புகள் வருகின்றன. அவற்றை ஏற்பதா? நிராகரிப்பதா? தயவு செய்து எனக்கு ஆலோசனை சொல்லுங்களேன்‘
நீங்கள் ஃபேஸ்புக், டிவிட்டர் அல்லது ஆர்குட் மெம்பரா? ஆம் என்றால் இதுபோன்ற பெருமை கலந்த புலம்பல்களை அடிக்கடி பார்த்திருப்பீர்கள்.
பொதுவாக நாம் அனைவருமே நம் மேல் ஒரு ஸ்பாட் லைட் விழுவதை விரும்புபவர்கள். வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகம் என எங்கு சென்றாலும் நம்மை மற்றவர்கள் கவனிப்பதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டாவது விரும்புவோம். ஆனால் பிரபலங்களுக்கு கிடைக்கின்ற அந்த கவன ஈர்ப்பு, சாமானியர்களான நமக்கு கிடைப்பதில்லை.
ஆனால் ஆன்லைன் தளங்களில் மெம்பரான சில நாட்களிலேயே அடடா... நாமே ஒரு வி.ஐ.பிதான் என்ற எண்ணம் எழுகிறது. சதா யாராவது வந்து ஹலோ சொல்கிறார்கள். ஆண்களும், பெண்களும் சர்வசாதாரணமாக நண்பராகிறார்கள். குட்மார்னிங் சொன்னால் கூட, என்மேல் உனக்கு இவ்வளவு பாசமா என்று உருகுகிறார்கள். நாமே நிராகரித்த நமது கவிதைகளை விழுந்து விழுந்து இரகிக்கிறார்கள். அடடா... நீ இவ்வளவு அழகா என்று கசங்கிய உடையில் எடுத்த போட்டோவை புகழ்கிறார்கள். காலையில் எல்.கே.ஜி படிக்கும் சுட்டியிடம் எரிந்து விழுந்தது தெரியாமல், சே... உன்னைப் போல அன்பான மனிதனை இது வரை சந்தித்ததே இல்லை என்று ஆரத் தழுவுகிறார்கள்.
இது சிலரை ஒரு மாயையில் தள்ளிவிடுகிறதாக நான் நினைக்கிறேன். நம்மை யாராவது கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் ஒரு பிரபலம். நமது ஹலோவுக்காக ஒரு நண்பர்கள் கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது என்ற பெருமை கலந்த பிரமை ஏற்பட்டுவிடுகிறது. அதன் பிரதிபலிப்புதான் அந்த வாசகம்.
‘நண்பராக ஏற்றுக் கொள்ளச் சொல்லி எனக்கு எக்கச்சக்கமான அழைப்புகள் வருகின்றன. அவற்றை ஏற்பதா? நிராகரிப்பதா? தயவு செய்து எனக்கு ஆலோசனை சொல்லுங்களேன்‘
உற்றுக் கவனித்தால் எக்கச்சக்கமான அழைப்புகள் என்பதில் ஒரு தற்பெருமையும், நான் பிரபலம் என்கிற எண்ணமும் ஒளிந்திருப்பதை கவனிக்கலாம். அழைப்புகளை ஏற்பதா? நிராகரிப்பதா? என்பதில் இந்த ஆன்லைன் பிரபல்யம் நிரந்தரம் என்ற நம்பிக்கை இருப்பதையும் கவனிக்கலாம்.
தற்போது நான் ஆர்குட்டில் அமைதியாகி, டிவிட்டரில் அவ்வப்போது எட்டிப்பார்த்து, ஃபேஸ்புக்கில் அதிகமாக உலவிக் கொண்டிருக்கின்றேன். என்னுடைய அனுபவத்தில் சொல்வதாக இருந்தால் ஆன்லைன் பிரபலம் என்பதும், நம்மை அனைவரும் கவனிக்கிறார்கள் என்பதும் வெறும் பிரமை. ஒரு மாதம் ஆன்லைன் பக்கம் போகாமல் இருந்து பாருங்கள். ஒரு வாரத்திற்கு எங்கே காணோம் என்று வருகிற மெசேஜ்கள் குறைந்து, இனிமே அவன் வரமாட்டான்யா என்று இரண்டாவது வாரத்தில் மறைந்து போவதை கவனிக்கலாம்.
நான் சொல்ல வருவதின் சுருக்கம் இதுதான். ஆன்லைன் நட்பு பலப்பட வேண்டுமென்றால் நிஜத்திலும் சந்தித்து பழகுங்கள். ஆன்லைனிலேயே தொடரும் நட்புகள் ஒரு log offல் முடிந்து போய்விடும். இன்றைய ஸ்பெஷல் என்று ஹோட்டல் வாசல்களில் எழுதி வைப்பார்கள். அதைப் போல தற்காலிகமானதுதான் ஆன்லைன் அழைப்புகளும். அவற்றை ஏற்பதாலும், நிராகரிப்பதாலும் எண்ணிக்கை மாற்றம் ஏற்படுமே தவிர, எண்ணங்களோ, வாழ்க்கையோ மாறப் போவதில்லை