
06 ஆகஸ்ட் 2009
சிவகாசி பட வசனம் - வருத்தம் தெரிவித்தார் விஜய்
சிவகாசி படத்தில் வக்கீல்களை கிண்டலடிக்கும் வகையிலான வசனங்கள் இடம் பெற்றதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.
பேரரசு இயக்கிய சிவகாசி படத்தில் வக்கீல்களை கிண்டலடிக்கும் வகையிலும், கேவலப்படுத்தும் வகையிலும் காட்சிகள் இருப்பதாக கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், சினிமா என்ற பெயரில் யாரை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாமா என்று கேட்டிருந்தது.
இந்த நிலையில் விஜய் சார்பில் வருத்தம் தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நான் வழக்கறிஞர்களுக்கு எதிரானவன் அல்ல. சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்திருந்தால், அது வழக்கறிஞர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்.
