தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி சுயம்வரம் நிகழ்ச்சி மூலம் நடிகை ராக்கி சவந்த் தனது மகனை தேர்ந்தெடுதுள்ளார். |
பிரபல இந்தி நடிகை ராக்கி சவந்த் சுயம்வரம் மூலம் தனது கணவரை தேர்ந்து எடுக்க முடிவு செய்தார். மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் டெலிவிஷன் சேனல் இதற்கான ஏற்பாடுகளை செய்தது. `ராக்கி கா சுயம்வர்' என்ற பெயரில் இந்த சுயம்வரம் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் ராக்கி சவந்தை மணக்க விரும்பி உலகம் முழுவதிலும் இருந்து 12 ஆயிரத்து 515 பேர் விண்ணப்பங்களை அனுப்பினர். அவர்களில் 16 பேரை தேர்வு செய்த ராக்கி சவந்த், பின்னர் அவர்களில் இருந்து எலேஷ், மானவ், சிட்டிஸ் ஆகிய 3 பேரை இறுதிப்போட்டிக்கு தேர்ந்து எடுத்தார்.
சுயம்வரத்தின் இறுதி நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. அந்த 3 பேரில் யார் ராக்கி சவந்தை மணக்க போகும் அதிர்ஷ்டசாலி என்று எல்லோராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.
நேற்றைய நிகழ்ச்சியில் 3 பேரும் மணமகன் போல் உடை அணிந்து முழு அலங்காரத்தில் வந்து இருந்தனர். ராக்கி சவந்தும் மணமகள் போல் உடை அணிந்து தேவதை போல் காட்சி அளித்தார்.
மன்னர் காலத்தில் நடந்த சுயம்வரம் நிகழ்ச்சி போல் எலேஷ், மானவ், சிட்டிஸ் ஆகிய 3 பேரும் மேடையில் நிற்க, ராக்கி சவந்த் கையில் மாலையுடன் வந்தார்.
அவர் யாருக்கு மாலை அணிவிக்கப்போகிறார்? என்று ஒவ்வொருவரும் ஆவலுடன் எதிர்பார்த்து படபடப்புடன் காத்திருக்க, 3 பேரையும் உன்னிப்பாக பார்த்து சென்ற ராக்கி சவந்த், இறுதியில் எலேசின் கழுத்தில் மாலையை அணிவித்து, அவரை தனது மணமகனாக, அதாவது வருங்கால கணவராக தேர்ந்து எடுத்தார். எலேசும் ராக்கி சவந்தின் கழுத்தில் மாலை அணிவித்தார். அப்போது கூடி இருந்தவர்கள் அவர்கள் மீது மலர்களை தூவி வாழ்த்து தெரிவித்தனர்.
சுயம்வரத்தில் கலந்து கொண்டு வாய்ப்பை இழந்த மானவ், சிட்டிஸ் ஆகியோரும் ராக்கி சவந்துக்கும், எலேசுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்கள். அவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
ராக்கி சவந்த்-எலேஷ் திருமணம் பின்னர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தனது வருங்கால கணவராக ராக்கி சவந்த் தேர்ந்து எடுத்துள்ள எலேஷ் கனடா நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆவார். |







