02 ஆகஸ்ட் 2009
ஈழத் தமிழர்களுக்கு தீர்வு வரும் .. ரஹ்மான் உருக்கம்
சென்னை: ஈழத் தமிழர்களின் துயர நிலையை எண்ணியே, நான் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தேன். நிச்சயம் அவர்களுக்கு நல்ல தீர்வு வரும் என்று உருக்கமாக கூறியுள்ளார் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிக் கெளரவித்தது.
நிகழ்ச்சியில் ரஹ்மான் உருக்கமாக பேசினார். தனது பேச்சைத் தொடங்கியதும், இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் துயர நிலையை கருத்தில் கொண்டு, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்து அதன்படி தமிழகத்தில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தேன்.
நான் ஆஸ்கர் விருது பெற்ற பின்னர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க என்னை தமிழகத்தில் அழைத்தனர். ஆனால் அவற்றை நான் தவிர்த்து வந்தேன். இலங்கைத் தமிழர்கள் துயரத்தில் இருக்கும்போது நாம் விழாவில் பங்கேற்க வேண்டாமே என்ற காரணத்தால்தான் இதைத் தவிர்த்தேன். ஈழத் தமிழர்களுக்கு நிச்சயம் நல்ல தீர்வு வரும் என்று நம்புகிறேன்.
பலரது அழைப்புகளை நான் நிராகரித்தது அவர்களை வருத்தியிருந்தால், அதற்காக இப்போது அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
ஆஸ்கர் விருது பெற்ற பின்னர் நான் தமிழகத்தில் கலந்து கொள்ளும் 2வது நிகழ்ச்சி இது. சில நாட்களுக்கு முன்பு அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை தொடக்க விழாவில் கலந்து கொண்டேன் என்றார் ரஹ்மான்.
சமீபத்தில் நடிகர் ராதாரவி, தாங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு ரஹ்மான் வர ஒத்துக் கொள்ளவில்லை என்று கூறி கடுமையாக விமர்சித்திருந்தார். அவருக்கும் சேர்த்தே நேற்றைய தனது பேச்சில் பதிலளித்துள்ளார் ரஹ்மான்.