இண்டெர்நெட்டில் தடுக்கி விழுந்தால் அசாதரணமான புகைப்படங்களின் தொகுப்புகளை பார்க்கலாம்.வலைப்பதிவாளர்களுக்கும் இத்தகைய புகைப்படங்களுக்கு இணைப்பு கொடுப்பதிலும் தொகுப்பாக வெளியிடுவதிலும் பெரும் ஆர்வம் இருக்கிறது.அப்படியே இ மெயில் மூலம் நண்பர்களுக்கு தட்டி விடுவதும் பலருக்கு வாடிக்கையாக உள்ளது.
ஒரு நல்ல புகைப்படத்தை ரசிப்பது மகிழ்ச்சிக்கு உரியதாகவும் படிப்பதைவிட பார்த்து ரசிப்பது சுலபமாக இருப்பதாலும் புகைப்படங்களுக்கு எப்போதுமே அதிக வரவேற்பு கிடைத்துவிடுகிறது.
புகைப்படங்கள் பல வகைப்பட்டதாக இருக்கின்றன.ஒரு சில படங்கள் பார்த்ததும் மெலிதாக புன்னகைக்க வைக்கலாம். இன்னும் சில விழுந்து விழுந்து சிரிக்க வைக்கலாம்.சில நினைத்து நினைத்து சிரிக்க வைக்கலாம்.இத்தகைய புகைப்படங்களை சேகரித்து வெளியிடும் வலைப்பதிவு ஒன்று இணைய உலகில் குறுகிய காலத்தில் அமோக வெற்றி பெற்று முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ளது.
ஆக்வர்டுபேமலிபோட்டோஸ் என்னும் அந்த தளம் அடிப்படையில் சங்கடம் தரக்கூடிய வகையான புகைப்பங்களை வெளியிடுகின்றது.
உதாரணத்திற்கு ஒரு புகைப்படத்தில் சற்றே வயதான மணமகள் கையில் பூங்கொத்தோடு மணமகன் மீது அமர்ந்து போஸ் கொடுக்கிறார்.இன்னொரு படத்தில் மூன்று பெண்கள் மற்றவர்களின் பாக்கெட்டில் தங்கள் கையை விட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இப்படி எல்லா படங்களுமே புன்னகைக்கவோ ,சிரிக்கவோ செய்யக்கூடியதாக இருக்கின்றன. எல்லா படங்களுமே திட்டமிடப்படமல் இயல்பான சூழ்நிலையில் எடுக்கப்பட்டு தற்செயலாக இத்தன்மையை பெற்றவை.அனைத்தும் குடும்பம் சார்ந்தவை. இவை பெரும்பாலும் சமம்பந்தப்பட்டவ்ர்களாலேயே சமர்பிக்கப்பட்டவை.
இந்த படங்களுடன் கொடுக்கப்படும் கிண்டலான புகைப்பட குறிப்புகள் அவற்றின் ரசிப்புத்தன்மையை பல மடங்கு உயர்த்தி விடுகின்றன.
அமெரிக்காவைச்சேர்ந்த மைக் பென்டர் மற்றும் டவுக் செர்னாக் ஆகிய இரண்டு நண்பர்களுமாக சேர்ந்து இந்த தளத்தை நடத்தி வருகின்றனர்.
ஒரு நாள் இருவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களது கதைகளை பேசிக்கொண்டிருந்தனர். இந்த கதைகளின் நகைச்சுவை தன்மை அவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன.அப்போது தான குடும்பம் சார்ந்த நகைச்சுவையில் வையம் தழுவிய பொதுதன்மை இருப்பதை புரிந்துகொண்டனர்.
இந்த உணர்வை புகைப்படங்கள் மிக அருமையாக உணர்த்தக்கூடும் என நினைத்தனர்.இவற்றை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் விரும்பினர். உடனே கூகுலில் இத்தகைய புகைப்படங்களை தேடிப்பார்த்தனர்.மரத்தில் ஒரு குடும்பம் இருப்பது போன்ற படம் கன்ணில் பட்டது. அந்த படத்தின் விநோத தன்மை மற்றும் நகைச்சுவை அம்சம் பளிச்சென கவர்ந்தது.
அந்த நிமிடத்தில் இது போன்ற படங்களை சேகரித்து வெளியிட ஒரு வலைப்பதிவை துவங்க முற்பட்டனர்.இப்படி பிறந்தது தான் ஆக்வர்டுபேமலிபோட்டோஸ் தளம்.
சங்கடத்தை பகிர்ந்து கொள்வோம் என்னும் வாசகத்தோடு விநோதமான புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தனர்.பலரும் விரும்பி குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து கொண்டதோடு மற்றவர்களும் அதிக அளவில் வந்து பார்த்து ரசித்தனர்.
விளைவு ஒரே மாதத்தில் தளத்திற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்தது.
இதனிடையே வானொலி நிகழ்ச்சி ஒன்றில் இந்த தளம் பற்றி குறிப்பிடப்பட பார்வையாலர்கலின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.இத்தனை குறுகிய காலத்தில் ஒரு வலைப்பதிற்கு இத்தனை பெரிய வரவேற்பு கிடைப்பது பெரிய விஷயம் தான்.
இதில் இடம்பெற்றுள்ள படங்கள் ஒவ்வொன்றுக்கும் வந்துள்ள நநூற்றுக்கணக்கான பின்னுட்டங்க்களை பார்த்தாலே இவை எந்த அளவுக்கு ரசிக்கப்படுகின்றன என புரிந்துகொள்ளலாம்.
இதில் சமர்பிக்கப்படும் படங்கள் தொடர்பாகவும் சுவையான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளனவாம். ஒரு சிலர் பிரசவ காட்சிகளை எல்லாம் கூட சம்ர்பிக்கின்றனராம். ஒரு சிலர் சமர்பித்துவிட்டு பின்னர் அதனை வில்ல்க்கிவிட கோருகின்றனராம்.சமீபத்தில் ஒரு பெண்மணி தான் அனுப்பிய படம் குடிபோதையில் அனுப்பியது என கூறி அதை எடுத்துவிடுமாறு கேட்டுக்கொண்டாராம்.
இப்படி நிறையவே சுவையான அனுபவங்கள் இருப்பதால் மைக் மற்றும் அவரது நண்பருக்கு இந்த தளம் பற்றி புத்த்கம் எழுதும் வாய்ப்பு தேடி வந்திருக்கிறது.
வலைப்பதிவு மூலம் புகழ்பெற்றதோடு புத்தகம் எழுதும் பெற்ற பதிவர்களின் பட்டியலில் இவர்களும் சேர்ந்துள்ளனர். மைக் ஒரு திரைக்கதை ஆசிரியர் என்பதால் இந்த வாய்ப்பால் அகமகிழ்ந்து போயிருக்கிறார்.
—-