
10 ஜூலை 2009
'சானியாமேனியா': மேலும் ஒருவர் கைது-இன்று நிச்சயதார்த்தம்
ஹைதராபாத்: இந்திய டென்னிஸ் வீரங்கனை சானியா மிர்சாவின் நிச்சயதார்த்தம் நெருங்க நெருங்க சானியாமேனியாவில் சுற்றும் ரசிகர்கள் திருமணத்தை நிறுத்த வேண்டும் என அவரது வீட்டுக்கு படையெடுத்து வருகின்றனர். நேற்று காதல் கடிதங்களுடன் வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. திறமையும், அழகும் ஒருங்கே சேர்ந்திருந்ததால் இவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் கிடைத்தனர். அவர்களில் பலருக்கும் கனவு கன்னியானார். அதில் சிலர் சானியாவை திருமணம் செய்ய வேண்டும் என்ற கனவில் சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அவருக்கும், ஹைதராபாத்தை சேர்ந்த ஷோரப் மிஸ்ரா என்பவருக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டு இன்று நிச்சயதார்த்தம் நடக்கிறது.
இதையறிந்த கேரளாவை சேர்ந்த அஷ்ரப் என்ற வாலிபர் கடந்த 7ம் தேதி சானியாவுக்கு வீட்டு அவரை தான் காதலிப்பதாகவும் அவரது நிச்சயாதார்த்தத்தை நிறுத்த வேண்டும் என தகராறு செய்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
நேற்று இவரை போல் மீண்டும் ஒரு வாலிபர் சானியாவை காதலிப்பதாக கூறி உத்தர பிரதேசத்தில் இருந்து கிளம்பி வந்தார். அவரது பெயர் அஜய் சிங் யாதவ்.
அவர் இலக்கம் 9, பஞ்ச்ரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் சானியாவின் வீட்டுக்குள் நுழைய முயன்றார். அவரை காவலில் இருந்த பாதுகாப்பு வீரர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசுக்கு தகவல் கொடுத்து அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் உத்தர பிரதேச மாநிலமா எடாவா நகரை சேர்ந்தவர் என்றும், குர்கானில் இருக்கும் துரோணாச்சர்யா பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிடெக் படிக்கிறார் என்பதும் தெரிய வந்தது.
மேலும், அவரது பையில் இருந்த சானியாவுக்காக எழுதப்பட்டிருந்த காதல் கவிதை ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.
இந்த இரண்டு சம்பவங்களையும் அடுத்து சானியாவின் வீடு மற்றும் இன்று நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கும் ஹோட்டல் தாஜ் கிருஷ்ணாவில் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்புக்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
