Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

08 ஜூலை 2009

வருங்கால தொழில்நுட்பம் 1 : சிலிக்கான் வேலி & ட்விட்டர்

வருடம் 1986...

மிழ்நாட்டு பள்ளிக் கல்வித் துறை முதல் முறையாக கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை +1ல் அறிமுகப்படுத்துகிறது. திருநெல்வேலி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் தமிழ் மீடியம் மட்டுமே உள்ள பள்ளியின் நிர்வாகம் ஆர்வத்துடன் கம்ப்யூட்டர் பாடம் ஆரம்பித்தது. எண்ணி ஏழு பேர் அந்தப் பிரிவில் சேர்ந்தோம் (திருச்செந்தூர் அருகிலிருக்கும் மணப்பாடு ஓர் அழகிய கடற்கரை கிராமம். மேலும், விவரங்கள் அறிய www.manavai.com).

அறிமுக வருடம் என்பதால் பாடப் புத்தகம் இல்லை. சொல்லித் தர ஆசிரியர் எவரும் உடனடி யாகக் கிடைக்கவில்லை. செட்டில் இருவர் மாணவியர் என்பதால், ஆசிரியர் இல்லாத வகுப்பு நேரங்கள்... இந்த நாட்களில் மொக்கை என்று அழைக்கப்படும் கடலை வறுத்தல்களில் கழிந்து போனது. 4 மாதங்களுக்குப் பின் சிக்கிய ஒரு ஆசிரியர் எலெக்ட்ரானிக்ஸில் டிப்ளமோ படித்தவர். ஒரே ஒரு பிரச்னை, எங்கள் பள்ளியில் கம்ப்யூட்டர் என்ற வஸ்துவே கிடையாது. தீவிர முயற்சிக்குப் பின், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தூத்துக்குடியிலிருந்து Commodore என்ற கம்ப்யூட்டரும், அதை இணைக்கத் தேவையான கறுப்பு-வெள்ளை மானிட்டரும் வாடகைக்கு எடுத்துவரப்பட்டது. 82-ல் வெளியிடப்பட்ட Commodore அந்த நாட்களுக்கு ரொம்பவே அட்வான்ஸ்டு. அதில் அறை குறையாக எழுதி Commodoreயை XXXXXXXXXX என அலறவிட்டதும் பளிச்.

இதையெல்லாம்விட மனதில் அச்சாகப் பதிந்த விஷயம். கம்ப்யூட்டர் துறையில் தமிழ் வார்த்தைகள் எதுவும் பயன்படுத்தாத அந்த நாட்களில், 'CPU என்றால் சென்ட்ரல் பிராசஸிங் யூனிட். இது கம்ப்யூட்டரின் மைய செயல்பாட்டைக் கவனிக்கும். இதற்கு மெமரியும் தேவை' என டெக்னோ மணிப்பிரவாள நடையில் எழுதிய தேர்வு பதில்கள்!

22 வருடங்களுக்குப் பிறகு...

சென்ற மாதத்தில் மௌன்டன்வியூவில் இருக்கும் மைக்ரோசாஃப்ட் அலுவலகத்தில் 'மேகக் கணினியம்' (Cloud Computing) பற்றிய வட்ட மேசை விவாதத்தில் கலந்துகொண்டு திரும்பிக்கொண்டு இருந்தேன். 20 வருடங்களுக்கு முன் சுஜாதாவின் 'சிலிக்கான் சில்லு புரட்சி' தொடரைப் படிக்க வாரந்தோறும் காத்திருந்த நினைவலைகள் மனதில் மோதியபடி இருக்க, வடக்கு US 101 சாலை யில் சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து சான்ஃபிரான்சிஸ்கோ செல்ல வேண்டும். ஒரு எக்ஸ்பிரஸ் அறிமுகம்....

சிலிக்கான் பள்ளத்தாக்கு அமைந்திருக்கும் கலிஃபோர்னியா மாநிலம், புது தொழில் முனை வோரை 100 வருடங்களுக்கும் மேல் ஈர்த்து வந்துள்ளது. 19-ம் நூற்றாண்டின் மத்தியில் ஆரம்பித்த தங்கத் தோண்டல் மோகம் ஆயிரக்கணக்கான மக்களை கலிஃபோர்னியா பக்கம் தள்ளிக்கொண்டு வந்தது. இவர்களின் தேவைகளுக்காகக் கட்டப்பட்டதுதான் சான்ஃபிரான்சிஸ்கோ. சிலிக்கான் பள்ளத்தாக்கு உருவானதும் மிகத் தற்செயலாக!

இங்கே இருக்கும் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துக்கு 70-களின் தொடக்கத்தில் எக்கச்சக்க நிதி நெருக்கடி. அதைச் சமாளிக்கத் தனக்குச் சொந்தமான நிலங்களை சில டெக்னாலஜி கம்பெனிகளுக்கு நீண்ட காலக் குத்தகையில் கொடுத்தது. அடுத்த சில வருடங்களில், இன்டெல் சிலிக்கான்கொண்டு செய்த தனது முதல் மைக்ரோ பிராசஸரை வெளியிட, பிறந்தது சிலிக்கான் பள்ளத்தாக்கு.

ஆப்பிள், ஆரக்கிள், ஹெச்பி, சிஸ்கோ, யாகூ, கூகுள் எனக் கடந்த 40-க்கும் மேலான வருடங்களாகத் தொடர்ந்து தரமான நிறுவனங்களை உருவாக்கியபடி இருக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கு சந்தேகமே இல்லாமல் சர்வதேசத் தொழில்நுட்பத் தலைநகரம். இன்று, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஹைடெக் நிறுவனங்கள்; 20 லட்சத்தைத் தொடும் பணியாளர்கள்; உலகம் முழுவதுமுள்ள இன்டர்நெட் டிராஃபிக்கின் நான்கில் ஒரு பகுதியை நுகர்வது சிலிக்கான் பள்ளத்தாக்கு தான்.

சினிமா கனவுகளுடன் கோடம்பாக்கம் வந்து சேரும் இளைஞர்களைப் போலவே, ஹைடெக் தொழில் கனவுகளுடன் சிலிக்கான் பள்ளத்தாக்கு வந்து சேரும் தொழில் முனைவோரை இங்கே ஸ்டார் பக்ஸ், பீட்ஸ் போன்ற காபி ஷாப்களில் பார்க்கலாம். இங்கு தொழிலைத் தொடங்குவதும் எளிதானதே. எங்காவது ஒரு கார் ஷெட் சின்ன வாடகையில் கிடைத்தால் போதும். கம்ப்யூட்டர் சகிதம் குடியேறி, நாளுக்கு 20 மணி நேரம் உழைத்து, அங்கேயே உறங்கி, உணவருந்தி, உழைத்துத் தமது கனவை நிறைவேற்றக் கடுமையாகப் போராடுவார்கள். வெற்றியடைந்தால், தொழில் முதலீட்டாளர்களிடம் பணம் பெற்று புது நிறுவனம் ஒன்றை நிறுவ வாய்ப்பு. தோல்வியடைந்தால், கவலை இல்லை... கஜினி போல மீண்டும் மீண்டும் முயலலாம். அல்லது செய்த முயற்சியையும் தோல்வி யையும் பெருமையாக ரெஸ்யூமில் சேர்த்து மற்ற ஒரு நிறுவனத்தில் சேரலாம்.

இன்று பிரமாண்டமாக வளர்ந்திருக்கும் ஆப்பிள் தொடங்கி கூகுள் வரை இந்தப் புள்ளிகளில் துவங்கி யவைதான். உதாரணத்துக்கு, ட்விட்டர் (Twitter -பற்றிய தகவல்கள் பெட்டிச் செய்தியாக). 2006-ல் தொடங்கப்பட்ட இந்த நுண்வலைப்பூ தளத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு மணி நேரமும் லட்சக்கணக்கானோர் சுருக்க வலைப்பூ எழுதுகிறார்கள். இன்றைய நிலவரத்தில், ட்விட்டர் பணத்தைத் தண்ணீராகச் செலவிட்டபடியே இருக்கிறது. எப்போது, எப்படி லாபகரமாக மாறும் என்பது தெரியவில்லை. உலகப் பொருளாதாரமே மந்த நிலையில் முடங்கி நிற்கும் நிலையில், இது போன்ற நிறுவனம் என்றோ மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தொழில் முதலீட்டாளர்களுக்கு அது பெரிய பொருட்டு இல்லை. காரணம், ட்விட்டர் என்பது ஷங்கர் படம் போல, ஒரு பிரமாண்ட ஐடியா. எப்படியும் அது வெற்றிபெற்றுவிடும் என்ற நம்பிக்கை.

'எல்லாம் ஓ.கே. ஆரம்பிக்கும்போது 'மேகக் கணினியம்' அப்படின்னு ஏதோ சொன்னியே, அது இன்னா?' என்ற கேள்வி எழுந்தால், உங்களது நினைவுத்திறனுக்குப் பாராட்டுக்கள்.

'கணினித் திறன் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இரண்டு மடங்காகியபடி செல்லும்!' - இன்டெல் நிறுவனரான ராஜர் மூர் 1965-ல் சொல்லியது இன்று வரை உண்மை. இணையம் நம் வாழ்வில் இடம் பிடித்த பிறகு, வலைதளங்களை இயக்கத் தேவையான கணினித் திறனை எளிதாகப் பெறுவது எப்படி என ரூம் போட்டு யோசிக்க வேண்டியிருந்தது. 'இணையம் என்பதே பல்லாயிரக்கணக்கான கம்ப்யூட்டர்களின் இணைப்புதானே... அதையே பயன்படுத்தி, தேவைப்படும் கணினித்திறனைப் பெற்றுக்கொண்டால் என்ன?' என்ற சிந்தனையின் வடிவாக்கம்தான் 'மேகக் கணினியம்'. இன்டெர்நெட்டுக்கு அமெரிக்காவில் இன்னொரு பெயர் – Cloud.

'இதனால் சாதாரண பப்ளிக்கான எனக்கென்ன பயன்?' என்று உங்களுக்குத் தோன்றலாம். மிகவும் பயன் இருக்கிறது. அதை அடுத்த க்ளிக்கில் பார்க் கலாம்!

'ஐ.டி. இண்டஸ்ட்ரியே விழுந்திருச்சே... அப்புறம் இன்னாத்துக்கு இதெல்லாம்?' என்கிறீர்களா... அதற்கும் இருக்கு ஒரு ஸ்வீட் ட்விஸ்ட்!

புறாவிடு தூதாகத் தொடங்கிய தகவல் தொடர்பு, கடிதம், தந்தி, ஃபேக்ஸ், இ-மெயில் என முன்னேறி, இப்போது சிட்டுக்குருவியில் வந்து நிற்கிறது. நறுக்கென்று 140 எழுத்துக்களில் 'இப்போது என்ன செய்கிறீர்கள்?' என்பதை ட்விட்டரில் தட்டினால், அதை ஆயிரக்கணக்கானவர்களுக்கு நொடிகளில் கொண்டுசேர்க்கும் இந்த இணைய தொழில்நுட்பத்தைச் சமீபத்தில் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வெற்றிகண்ட பிரபலம், பராக் ஒபாமா!

அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமது துணை அதிபர் வேட்பாளரை அறிமுகப்படுத்துவது அங்கே மிகப் பெரிய மீடியா நிகழ்வாக இருக்கும். ஆனால், 'செனட்டர் ஜோ ஃபைடனை துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கிறேன்!' என ட்விட்டிவிட்டு சில மணி நேரங்களுக்குப் பின்தான் மீடியாவுக்கே அறிவித்தார் ஒபாமா. (ஒபாமாவின் ட்விட்டர் முகவரி: )

அமெரிக்க அதிபருக்கு மட்டுமல்ல, அண்ணாச்சி ராதாகிருஷ்ணனுக்கும் ட்விட்டரால் பயன் உண்டு. காரணம், ட்விட்டரைத் தனிமனிதர்கள் மட்டுமன்றி நிறுவனங்களும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. தனக்குப் பிடித்த நிறுவனங்களின் ட்விட்டுகளின் தொடர்பாளராக (follower) தன்னைப் பதிவுசெய்துகொண்டால், அந் நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளை நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, ராதாகிருஷ்ணனுக்கு திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா மிகவும் பிடிக்கும். இருட்டுக் கடைக்காரர்கள் தங்களுக்கென ஒரு ட்விட்டர் முகவரி வைத்திருந்து, ராதாகிருஷ்ணன் அதில் பதிவு செய்துவைத்திருந்தால் சுடச்சுட அல்வா கடைக்கு வரும் நேரத்தை ராதாகிருஷ்ணன் தெரிந்துகொண்டு முதல் ஆளாகக் கடையில் நிற்கலாம். அன்றைய அல்வாவில் கொஞ்சம் இனிப்பு அதிகமாக இருப்பது போலத் தோன்றினால், அதை அவர் தனது ட்விட்டரில் எழுதலாம். உடனே சம்பந்தப்பட்டவர்கள் அதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கலாம். லட்சக்கணக்கான மக்களின் நாடித்துடிப்பைத் துல்லியமாகக் கணிக்கும் திறனை இதுவரை வேறு எந்தத் தொழில்நுட்பமும் கொடுத்ததில்லை!

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com