10 ஜூலை 2009
லெப்டினென்ட் கர்னல் ஆக மோகன்லால் நியமனம்!
டெல்லி: கபில்தேவைத் தொடர்ந்து இப்போது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், கெளரவ லெப்டினென்ட் கர்னல் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராணுவத்தின் கிளை என வர்ணிக்கப்படும் டெரிட்டோரியல் ஆர்மியிலும் மோகன்லால் சேருகிறார்.
இன்று டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மோகன்லாலுக்கு கெளரவ லெப்டினென்ட் அந்தஸ்தை தரும் பதக்கத்தை அணிவித்தார் ராணுவ தலைமைத் தளபதி தீபக் கபூர். அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனியும் உடனிருந்தார்.
ஏற்கனவே சமீபத்தில் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் கபில் தேவுக்கு இதே கெளரவம் வழங்கப்பட்டது நினைவிருக்கலாம். தற்போது மோகன்லாலுக்கு இந்த கெளவரம் அளிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மெட்ராஸ் ரெஜிமன்ட்டில் உள்ள 122வது இன்பேன்டரி பட்டாலியன் அல்லது கண்ணூர் டெரியர்ஸ் படையில் மோகன்லால் சேர்ந்து முறையாக 2 மாதங்கள் பயிற்சியும் பெறுவார்.
டெரிட்டோரியல் ஆர்மி என்பது மக்கள் முன்வந்து சேரும் படையாகும். இதில் இணைந்து, பகுதி நேர ராணுவ சேவையாற்றலாம்.
நாட்டில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் டெரிட்டோரியல் ஆர்மியில் இடம் பெற்றிருப்பவர்களுக்கு சேவையாற்ற அழைப்பு விடுக்கப்படும். அப்போது அவர்கள் கிட்டத்தட்ட முழு நேர ராணுவ சேவையாற்றுவார்கள்.
ராணுவத்தினருக்கு உதவியாக இவர்கள் அனுப்பி வைக்கப்படுவர்.
தற்போது டெரிட்டோரியல் ஆர்மியில், 42 இன்பேன்டரி பட்டாலியன்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.