
08 ஜூலை 2009
ஸ்ருதிக்கு ராஜா தந்த ஆசி!
நான் சினிமாவில் இப்போதுதான் நடிக்க ஆரம்பித்துள்ளேன். என் நடிப்பு நன்றாக இருப்பதற்கு என் தந்தை காரணம். இசையில் நான் இந்த அளவு ஈடுபாடு காட்ட இளையராஜா காரணம் என்றார் நடிகை ஸ்ருதி கமல்ஹாசன்.
'லக்' எனும் படத்தில் நடித்துள்ளார் நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி. அவருக்கு ஜோடியாக அமீர்கானின் மருமகன் இம்ரான் கான் நடித்துள்ளார்.
'லக்' படம் 24-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தில் ஸ்ருதி கமல் ஒரு பாடலும் பாடி உள்ளார்.
சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல்கள் மும்பையில் வெளியிடப்பட்டன.
பாடல் வெளியீட்டுக்கு முன், அதை மேடையில் நடனமாக வெளிப்படுத்திய ல்ருதிக்கு பலத்த கைத்தட்டல்கள் பரிசாகக் கிடைத்தன.
பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
லக் படத்தின் கதை மிக வலுவானது. நான் மிகவும் கஷ்டப்பட்டு இந்தப் படத்தில் நடித்துள்ளேன். இப்படத்தை இயக்குனர் சோகம் ஷா பிரமாண்டமாக எடுத்துள்ளார். கதை நன்றாக இருப்பதால் படம் மிகப் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
நான் சினிமாவில் நடிப்பதற்கு தந்தை கமல்ஹாஸன் அளித்த ஊக்கம்தான் காரணம். நான் ஒரு நடிகையாக உருவானதற்கு அவர்தான் காரணம். அவரது நடிப்பு திறமையை கண்டு நான் பல தடவை பிரமித்துப் போய் இருக்கிறேன்.
சிறு வயதில் நான் அபூர்வ சகோதரர்கள் படப்பிடிப்புக்கு சென்று அப்பா நடிப்பதை பார்த்தேன். அவர் குள்ளர் வேடத்தில் நடிப்பதை பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. அவர் சிறந்த உழைப்பாளி. அவரிடம் இருந்துதான் நான் கடின உழைப்பு விடா முயற்சியை கற்று கொண்டேன். அவரது நடிப்பை யாரும் காப்பியடிக்க முடியாது.
அவர் ஒரு காரியத்தில் இறங்கி விட்டால் அதை வெற்றிகரமாக முடிக்கும் வரை ஓயமாட்டார்.
நான் ஹே ராம் படத்தில் அப்பாவுக்கு காஸ்டியூம் டிசைனராக வேலை பார்த்தேன். ஆனால் அந்த படத்தை சில பத்திரிகைகள் மோசமாக விமர்சனம் செய்திருந்தன. அதைப் பார்த்த போது எனக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது.
சிறு வயதில் நான் அப்பாவிடம் படங்களுக்கு பாடல் ஒலிப்பதிவு நடக்கும் ரிக்கார்டிங் தியேட்டருக்கு செல்ல வேண்டும் என்று அடம் பிடிப்பேன். அப்போது அவர் என்னை இளையராஜா சாரின் ரிக்கார்டிங் தியேட்டருக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது என்னைப் பார்த்த இளையராஜா, "இவள் எதிர்காலத்தில் மிகப்பெரிய பாடகியாக வருவாள்" என்று கூறினார். அதற்கு அப்பா, "எதை வைத்து ?" என்று கேட்டார். அதற்கு, "பெயரிலேயே ஸ்ருதி இருக்கிறதே... நான் சொல்கிறேன். இவள் ஒரு பெரிய பாடகிதான்", என்றார். இளையராஜாவின் அந்த பாராட்டை ஒரு போதும் மறக்க முடியாது.
என் அப்பா இதுவரை என்னை ஒரு தடவை கூட திட்டியது இல்லை. அந்த அளவுக்கு நான் அவரிடம் நடந்து கொண்டதும் இல்லை. என் மீது அவர் முழு நம்பிக்கை வைத்துள்ளார். அவரது நம்பிக்கை வீண் போகாது," என்றார் ஸ்ருதி ஹாசன்.
