சன்ஸில்க் மிஸ் செளத் இந்தியா 2009 போட்டிகள் சென்னையில் நடந்து. இதில் பெங்களூரைச் சேர்ந்த தீபிகாவுக்கு மகுடம் சூட்டப்பட்டது. 2002ம் ஆண்டு முதல் வெற்றிகரமாக நடந்து வரும் அழகிப் போட்டி இந்த மிஸ் செளத் இந்தியா. இந்த ஆண்டுக்கான போட்டி சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடந்தது.
திரையுலகைச் சேர்ந்த ரகுமான், ரியாஸ்கான், இயக்குனர் மாதேஷ், சன்ஸில்க் ஜாவேத் ஆகியோர் நடுவர்களாக அமரந்திருந்தனர். இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, தேவயானி, ஷெரீன், சாந்தனு, அசோக், சிபிராஜ் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர்.இறுதிப் போட்டிக்கு தென்னிந்தியாவின் 4 மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான அழகிகளிலிருந்து தலா 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு அறிமுகச் சுற்று, தகுதி சுற்று மற்றும் கேள்வி பதில் சுற்று ஆகிய மூன்று சுற்றுகளில் போட்டிகள் வைக்கப்பட்டு அதன் அடிப்படையில் மிஸ் தமிழ்நாடாக அனுஷாவும், மிஸ் ஆந்திராவாகவும் ஸ்வேதாவும், மிஸ் கேரளாவாக அகான்ஷாவும் மிஸ் கர்நாடகாவாக ஜாஸ்மினும் தேர்வு செய்யப்பட்டனர்.பின்னர் மிஸ் செளத் இந்தியாவாக பெங்களூரைச் சேர்ந்த தீபிகா தேர்வு செய்யப்பட்டார்.
இரண்டாவது இடத்தை ஜாஸ்மினும், மூன்றாவது இடத்தை விஜயவாடாவைச் சேர்ந்த சௌமியாவும் பிடித்தனர்.இவர்களுக்கு நடிகை ரம்யா கிருஷ்ணன் கிரீடம் சூட்டினார்.இந்த அழகிப் போட்டியை தொடர்ந்து 9 ஆண்டுகளாக நடத்தி வருகிறது மாயா ஈவன்ட்ஸ் நிறுவனம். நிகழ்ச்சிகளை விஜய் ஆதிராஜ் தொகுத்து வழங்கினார்.