உலக அழகிப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற என்னை வரவேற்காதது மட்டுமல்ல, போனில் வாழ்த்தக் கூட ஆளில்லையே, என்ற அழாத குறையாக குமுறுகிறார் பார்வதி ஓமணக்குட்டன்.
மிஸ் இந்தியா அழகியும், உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு 2-வது இடத்தை பிடித்தவருமான பார்வதி ஓமனகுட்டனின் சொந்த ஊர் கேரளா. ஆனால் அவர் படித்து வளர்ந்தது எல்லாம்
மும்பையில்தான்.

இந்த நிலையில் கேரள, மாரட்டிய அரசுகள் தன்னை அங்கீகரிக்கவில்லை என பார்வதி ஓமனகுட்டன் புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
உலக அழகிப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றும் கேரள அரசு என்னை அங்கீகரிக்கவில்லை. வேறு யாராவது உலக அழகி போட்டியில் கலந்து கொண்டு விட்டு ஊர் திரும்பினால் அதை முக்கிய சம்பவமாக கருதி திருவிழா போல கொண்டாடியிருப்பார்கள்.
ஆனால் நான் ஊர் திரும்பிய பின்னரும் கூட கேரள அரசு சார்பில் யாரும் என்னிடம் போனில் கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை. அது போலத்தான் நான் வளர்ந்த மாநிலமான மராட்டிய அரசும் என்னை புறக்கணித்துவிட்டது.

ஒருவேளை நான் மும்பையில் பிறந்திருந்தால் என்னை அங்கீகரித்திருப்பார்களோ என்னவோ... பொதுவாக அரசுகள் கிரிக்கெட் வீரர்களுக்கும், சினிமா கலைஞர்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றன. எங்களைப் போன்ற சாதனையாளர்களைக் கண்டு கொள்வதில்லை, என்றார் பார்வதி.
அழகிகளை இப்படி அழவைப்பது அழகா...?