இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜெயவர்ததனே விலகியதை அடுத்து டுவென்டி-20 உலக கோப்பை தொடருக்கான புதிய கேப்டனாக சங்ககரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக முத்தையா முரளிதரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் தொடரை 4-1 என வென்று அசத்தியது. சொந்த மண்ணில் அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜெயவர்த்தனே அறிவித்தார்.பாகிஸ்தான் தொடருக்கு பின் புதிய கேப்டன் நியமிக்கப்படுவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இந்நிலையி்ல் இலங்கை வீரர்கள் லாகூரில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளானார்கள். இதையடுத்து தொடர் ரத்து செய்யப்பட்டது.
இந்த அதிர்ச்சியில் இருந்து இலங்கை வீரர்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றனர்.இந்நிலையில் வரும் ஜூன் 5ம் தேதி துவங்கவிருக்கும் உலக கோப்பை டுவென்டி-20 தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக சங்ககரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக முரளிதரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.கடின சுற்றில் இலங்கை...டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் இலங்கை சி பிரிவில், ஆஸ்திரேலியா மற்றம் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் இடம்பிடித்துள்ளது. மற்ற இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாட கூடியவை என்பதால் புதிய கேப்டன் சங்ககராவுக்கு முதல் தொடரே சவாலானதாக இருக்கும்.
இத்தொடருக்கான உத்தேச இலங்கை வீரர்கள் பட்டியலும் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே, தில்ஷன், சமிந்தா வாஸ், மெண்டிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி ஏ பிரிவில் வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.