தமிழ் சினிமாவில் தன் கவர்ச்சியான நடிப்பால் கலக்கி அதனால் எக்கச்சக்க ரசிகர்களை தக்க வைத்திருக்கும் நடிகை நமீதா, கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக வந்து பல்வேறு இளம் நடனக் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார். அவர் பேசும் கொஞ்சும் தமிழை கேட்பதற்காகவே ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இந்நிலையில் மானாட மயிலாட அனுபவம் குறித்து நமீதா அளித்துள்ள பேட்டியில், மானாட மயிலாட நிகழ்ச்சி மூலமாக பாராட்டுகிற வேலையை நான் செய்து வருகிறேன். இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால்,நடனத்தை சரியாகப் புரிந்து கொண்டவர்கள், ரசிக்க தெரிந்தவர்கள் அதைப் பார்த்து பாராட்டும் போது, போட்டியாளர்களுக்கும், அந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கும் இன்னும் கூடுதல் உற்சாகம் கிடைக்கிறது. தென்னிந்தியாவில் இந்த வேலையை முதலில் நான் இறங்கி செய்ததால் எனக்கு நடிப்பதில் கிடைக்கிற திருப்தியை விடவும் அதிகமாக மானாட மயிலாட மூலம் கிடைக்கிறது. சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் நடிகைகளுக்கு மார்க்கெட் போய்விடும் என்பதை நான் உடைத்திருக்கிறேன். மானாட மயிலாட நிகழ்ச்சி என்னுடைய மனதிற்கு நிறைவையும், குதூகலத்தையும் கொடுக்கிறது, என்று கூறியுள்ளார்.