விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், செரினா வில்லியம்ஸ் ஆகியோர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று தனது 5வது விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றிய அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், அதன் பின்னர் நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் தனது மூத்த சகோதரி வீனஸ் வில்லியம்ஸுடன் இணைந்து விளையாடினார்.
இந்த ஜோடி, செக் குடியரைச் சேர்ந்த அன்ட்ரே லவக்கோவா, லூசி ரடெக்கா ஜோடியை சந்தித்தனர்.
வில்லியம்ஸ் சகோதரிகள் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி 7-5, 6-4 என்ற கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றனர்.
இது இவர்கள் இருவரும் இணைந்து பெற்றுக் கொள்ளும் 5வது விம்பிள்டன் இரட்டையர் பட்டம் என்பதோடு, இருவருமிணைந்து கைப்பற்றிக் கொள்ளும் 13வது கிராண்ட் ஸ்லாம் பட்டமுமாகும்.
இருவரும் ஏற்கனவே தலா 5 விம்பிள்டன் தனிநபர் பட்டங்களைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் 2000, 2002,, 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் விம்பிள்டன் இரட்டையர் பட்டத்தைக் கைப்பற்றிய இருவரும் தற்போது இவ்வாண்டும் கைப்பற்றியுள்ளனர்.
தவிர, 2000, 2001, 2005, 2007, 2008 ஆகிய ஆண்டுகளில் வீனஸ் வில்லியம்ஸ் மகளிர் தனிநபர் விம்பிள்டன் பட்டத்தை வெல்ல, 2002, 2003, 2009, 2010 2012 ஆகிய ஆண்டுகளில் செரினா வில்லியம்ஸ் இந்தப் பட்டத்தை வென்றுள்ளார்.