11 ஜூன் 2009
பனி பள்ளத்தில் விழுந்த லஷ்மி ராய்!
சுவிட்சர்லாந்துக்கு நான் அவனில்லை பாகம் 2ன் படப் பிடிப்புக்குப் போன இடத்தில் பெரிய பனிப் பள்ளத்தில் சிக்கி விழுந்து விட்டார் லஷ்மி ராய். பெரும் போராட்டத்துக்குப் பின்னர் அவரை பத்திரமாக மீட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முதல் தமிழ் ரீமேக் படம் என்ற பெருமை நான் அவன் இல்லை. அதைத் தொடர்ந்து ஏராளமான தமிழ்ப் பட ரீமேக் படங்கள் வரத் தொடங்கின.
இப்போது நான் அவன் இல்லை படத்தின் 2ம் பாகத்தை தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் தயாரிக்க, செல்வா இயக்குகிறார்.
ஹீரோ ஜீவன். ஹீரோயின்கள் மட்டும் புத்தம் புதிய ஐவர். 2ம் பாகத்தின் கதை முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடப்பது போல காட்டுகிறார்கள்.
இதற்காக சுவிட்சர்லாந்து, ஜெனீவா, பிரேசில், துபாய் ஆகிய நாடுகளில் படப்பிடிப்பை நடத்தினார்கள்.
ஜீவனுடன் நாயகிகளான சங்கீதா, லஷ்மி ராய், ஸ்வேதா, ஹேமமாலினி, ரச்சரா ஆகியோர் பங்கேற்று நடித்து வருகின்றனர்.
லஷ்மி ராய் இப்படத்தில் நடிகையாகவே வருகிறார். ஷூட்டிங்குக்காக வெளிநாடு வரும் ராய், ஜீவனின் காதல் வலையில் சிக்கி வீழ்வதாக வருகிறதாம் அவரது கதாபாத்திரம்.
ஜில் ஜில் சுவிட்சர்லாந்தில், ஜீவன்- ராய் சம்பந்தப்பட்ட சூடான ஒரு பாடல் காட்சியை படமாக்கினர். அப்போது அங்கு பனிமழை பொழிந்து கொண்டிருந்தது. கடும் குளிரை சமாளிக்க முடியாமல் திணறியபடி லஷ்மி ராய் நடித்துக் கொண்டிருந்தார்.
பாடல் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு பனிப் பள்ளத்தில் (snow gorge) ராய் விழுந்து விட்டார். விழுந்த வேகத்தில் பனிக் கட்டிகள் அவர் மீது விழுந்தன. அதிர்ச்சி அடைந்த படப்பிடிப்புக் குழுவினர் துரிதமாக செயல்பட்டு பனிக் கட்டிகளை விலக்கி கீழே கிடந்த லஷ்மி ராயை பத்திரமாக மீட்டனர்.
பனிக் கட்டிகள் உடம்பில் விழுந்ததால் உடல் மரத்துப் போய் விட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று லஷ்மி ராய்க்கு சிகிச்சை கொடுத்தனராம்.
பள்ளத்தில் விழுந்த அதிர்ச்சியிலிருந்து மீள லஷ்மி ராய்க்கு நெடு நேரமானதாம்.