08 ஜூன் 2009
'வேண்டாம் ஆஸ்திரேலியா!' : பாலிவுட்
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப்பச்சன், அமீர்கான் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தனக்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் வழங்குவதாக இருந்த டாக்டர் பட்டத்தை வேண்டாம் என அமிதாப் மறுத்தது நினைவிருக்கலாம்.
இந்தியர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் இனவெறிக் கொடுமை நடப்பதாக அமீர் கான் தனது வலைப்பூவில் எழுதியதோடு இதைக் கண்டித்து இந்தியர்கள் குரல் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால் சீக்கிய இனத்தவர்களைத் தவிர வேறு யாரும் இதுபற்றி பெரிதாக அக்கறை கொள்ளவில்லை. குறிப்பாக தென்மாநில மக்கள் இந்தப் பிரச்சினை குறித்து சின்ன அசைவைக் கூட காட்டவில்லை. எங்கள் இன மக்களை ஆயிரம் ஆயிரமாய் கொன்று குவிக்கப்பட்டபோது எங்கே போயிருந்தார்கள் இந்த பாலிவுட் நட்டத்திரங்கள்? என்றே சாமானிய மக்கள் முதல் பிரபலமான நட்சத்திரங்கள் வரை கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
எனவே இந்தப் பிரச்சினையை இப்போது தீவிரமாகக் கையிலெடுக்க முடிவு செய்துள்ளது பாலிவுட். ஆஸ்திரேலியாவில் நடக்கவிருந்த படப்பிடிப்புகளை ரத்து செய்ததோடு, அங்கு தங்கி பட வேலைகளைக் கவனித்து வந்த தொழில்நுட்ப குழுவினரை முழுமையாகத் திருப்பியழைக்கத் துவங்கியுள்ளனர் மும்பை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்.
இனி ஆஸ்திரேலியாவுக்கு விடுமுறைக்குக் கூட போகமாட்டேன் என அறிவித்துள்ளார் பிரபல இயக்குநர் டேவிட் தவான். இந்தியர்களுக்கு முழு மரியாதை தரப்படும்வரை ஆஸ்திரேலியாவுக்கே போகமாட்டேன் என அறிவித்துள்ளார் சுபாஷ் கய். மதுர் பண்டார்கர், ரத்தன் ஜெய்ன் போன்றவர்களும் இதே கருத்தை வெளியிட்டுள்ளனர்.
ஆனால் இலங்கையில் தமிழர்கள் குண்டுவீசிக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது இந்திய கிரிக்கெட் அணியை அங்கு விளையாட அனுப்பியது இந்திய கிரிக்கெட் வாரியம். அதை ரசித்து மகிழ்ந்தவர்கள் இதே நட்சத்திரங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது!.