
31 மே 2009
அசத்தப்போவது யாரு’ புகழ் கோவை ரமேஷ் விபத்தில் பலி
கோவையைச் சேர்ந்தவர் ரமேஷ் என்ற ரமேஷ்குமார் (30). சன் டி.வி.யில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாகிவரும் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.
பெண் வேடத்தில் ரசிகர்களை கவர்ந்திழுப்பார். இந்த நிகழ்ச்சியால் பிரபலமான ரமேஷ், தனியாக கலை நிகழ்ச்சியும் நடத்தி வந்தார். இவரும், இவரது நண்பர் கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (25) என்பவரும் நேற்றிரவு திருவாரூரில் கலைநிகழ்ச்சி நடத்திவிட்டு, காரில் கோவை திரும்பிக் கொண்டிருந்தனர். காரை கார்த்திகேயன் ஓட்டினார்.
இன்று அதிகாலை 5.30 மணி அளவில் காங்கயம் - திருச்சி ரோடு கொடுமுடி பிரிவு என்ற இடத்தில் வரும்போது கோவையில் இருந்து மணல் எடுக்க கரூர் சென்ற லாரியும் காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. ரமேஷ், கார்த்திகேயன் இருவரும் காருக்குள்ளேயே உடல் நசுங்கி பலியாயினர்.
இதுபற்றி தகவலறிந்ததும் காங்கயம் போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்டநேரம் போராடி காரில் சிக்கியிருந்த உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தால் அந்தப் பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அம்மாதுரை, வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
