டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த பத்ம விருதுகள் விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்தார். அவருடன் வந்த அமர்சிங்கை ஓரம் கட்டிய பத்திரிக்கையாளர்கள் ஐஸ்வர்யா ராயை சுற்றிச் சூழ்ந்ததால், அமர்சிங் வெறுத்துப் போய் ஓரமாக நகர்ந்து போய் விட்டார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று பத்ம விருது வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற வந்திருந்தார் ஐஸ்வர்யா ராய். அவருடன் மாமனார் அமிதாப் பச்சனும் வந்திருந்தார். வழக்கம் போல 'கொடுக்கு' அமர்சிங்கும் கூடவே வந்திருந்தார்.
பிங்க் நிற சேலையில் படு அழகாக வந்திருந்தார் ஐஸ்வர்யா ராய். அவரைப் பார்த்ததும் அங்கிருந்த அத்தனை பேரின் கண்களும் ஐஸ் மீதே இருந்தன.ஐஸ்வர்யாவைப் பார்த்ததும் டிவி கேமராக்களும், புகைப்படக்காரர்களின் கேமராக்களும் அவர் பக்கம் திரும்பி, படம் எடுத்துத் தள்ளின. விருது விழாவின் ஒரு பகுதியாக அருகில் இருந்த மண்டப அரங்கில் தேநீர் விருந்து நடந்தது.
அந்த விருந்துக்காக வந்த வழியில் ஐஸ்வர்யாவை ஆட்டோகிராப் கேட்பவர்களும், கேமராமேன்களும், புகைப்படக்காரர்களும் சூழ்ந்து கொண்டனர்.கையில் கிடைத்ததை எல்லாம் காட்டி கையெழுத்து போடுமாறு கேட்டுக் கொண்டனர். அப்போது அங்கு அமிதாப் பச்சனும், கூடவே அமர்சிங்கும் வந்தனர். ஆனால் அவர்களை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.ஐஸ்வர்யாவுக்கு அருகில் வந்து கூட்டத்தை ஒழுங்கு படுத்த முயற்சித்தார் அமர்சிங். ஆனால் நெக்கியடித்த கூட்டத்தால் அவர் ஓரமாக தள்ளப்பட்டார்.போடுகிற டிவியில் எல்லாம் தனது முகமே காட்டப்பட்டு வரும் நிலையில் ஐஸ்வர்யா பக்கம் அத்தனை பேரும் திரும்பி விட்டதைப் பார்த்து வெறுத்துப் போனார் அமர்சிங்.
நான் இங்கே என்ன செய்கிறேன் என்று தெரியவில்லை என்று புலம்பியபடியே வேறு பக்கமாக நகர்ந்து போனார் அமர்சிங்.ஒரு வழியாக கூட்டத்தை விட்டு தப்பித்த ஐஸ்வர்யா அங்கிருந்து நகர்ந்து சென்றார். அவருக்குப் பின்னாலேயே அமிதாப் பச்சனும், அமர்சிங்கும் சென்றனர்.இங்கு மட்டும்தான் அமர்சிங்கால் அரசியல் செய்யவே முடியாது என்று குறும்புக்கார கேமராமேன் ஒருவர் காமென்ட் அடித்ததைக் கேட்க முடிந்தது. அமர்சிங்குக்கும் கூட அது கேட்டிருக்கலாம்.முன்னதாக, அணு சக்தி கமிஷன் தலைவர் அனில் ககோத்கருக்கு பத்மபவிபூஷண் விருதும், 62 பேருக்கு பத்மஸ்ரீவிருதையும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வழங்கினார்.குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.