Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

03 ஏப்ரல் 2009

பாசம் வச்ச பச்சக்கிளிதான்....

டி.ராஜேந்தர் பார்ப்பதற்குதான் அன்னாசி மாதிரி! பிழிந்தால் நவரசம் என்பதை முன்பே சொல்லியிருந்தேன். அதுதான் இவ்வளவு கொடூரத்திற்கிடையேயும் நண்பர்களை தக்க வைத்திருக்கிறது இப்போதும்!
சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் இவரோடு பார்த்தவர்களை இப்போதும் பார்க்கிறேன். குடந்தை ராஜப்பா, கருணாநிதி, மதி, மற்றும் சிலரின் பெயர்கள் மறந்துவிட்டது. ராஜேந்தரை சுற்றி சுற்றியே வருபவர்கள் இவர்கள். உயிருள்ளவரை உஷா காலத்திலிருந்தே அவரது உற்ற நண்பர்கள். அல்லது தொண்டர்கள். அல்லது கவுரவமான வேலைக்காரர்கள்! இவர்களுக்கு என்ன செய்திருக்கிறார் டி.ஆர்? கொஞ்சம் அக்கறையோடு கேட்டுப்பார்த்தால் உதட்டை பிதுக்குவார்கள். ஆனாலும், இவர்களின் சந்தோஷமும் துக்கமும் டி.ராஜேந்தர்தான். இவர்களையும், ராஜேந்தரையும் இறுக்கமாக முடுக்கி வைத்திருக்கிற ஸ்பானர் எது? அவர் கொடுக்கிற சின்ன சின்ன அன்புதான்! (நன்றாக கவனிக்கவும், அன்புதானே தவிர அன்பளிப்பு அல்ல) அப்போதுதான் தனியார் தொலைக்காட்சிகள் உருவாகி வந்த நேரம். தனது படங்களின் தொலைக்காட்சி உரிமையை எந்த டி.வி க்கும் வழங்கியிருக்கவில்லை இவர். அதனால் வாரத்திற்கு ஒருமுறை இவரது அலுவலகத்தில் அடுக்கப்பட்டிருக்கும் ஏதாவது இரண்டு படப்பெட்டிகளாவது தியேட்டர்களுக்கு போகும். அந்த பெட்டிகள் திரும்பி வரும்போது கூடவே கலெக்ஷனும் வரும். எல்லா செலவுகளும் போக குறைந்தது பத்தாயிரமோ இருபதாயிரமோ தருவார்கள். திருமதி. உஷா இருந்தால் "அவங்ககிட்டே கொடுங்க" என்று அந்தப்பக்கம் கை நீட்டி விடுவார். அவர் இல்லையென்றால், அந்த பணத்தை அப்படியே இவர்களுக்கு (இன்னும் சிலரும் அப்போது கூட இருந்தார்கள்) பிரித்துக் கொடுத்துவிடுவார். "யேய், அக்கா வர்றதுக்குள்ளே வந்து வாங்கிக்கோங்கப்பா" என்று இவர் அவசரம் காட்டுவது ஆச்சர்யமாக இருக்கும்! இன்றைய நிலையில் இந்த வருமானத்திற்கும் வாய்ப்புகள் இருக்கப் போவதில்லை. ஆனாலும் தொட்டு தொடர்கிறது இவர்களின் பாச பந்தம்! செங்கல்பட்டிலிருந்து தினமும் உஷா அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தார் லே-அவுட் ஆர்ட்டிஸ்ட் முருகன். உஷா இதழுக்கு இயக்குனர் ஒருவர் ஆவேச பேட்டியளித்திருந்தார். 'அர்ஜுன் ஒரு வளர்த்த கடா' -இதுதான் அந்த கட்டுரையின் தலைப்பு. நம்ம முருகன் அதை எப்படி எழுதியிருந்தார் தெரியுமா? 'அர்ஜுன் வளர்த்த, ஒரு கடா!' யாரும் கவனிக்காமல் அப்படியே பிரசுரமானது. கட்டுரையை வாசித்த வாசகர்கள் ஒரு இடத்திலும், அர்ஜுன் கடா வளர்த்தார் என்ற விபரமே வரவில்லையே என்று மண்டையை பிய்த்துக் கொண்டிருப்பார்கள். அப்படி சுதந்திரமாக செயல்படக் கூடியவர் முருகன். இந்த விஷயத்தை அறிந்த பிறகும், "பரவாயில்லைப்பா... ஒரு வார்த்தையை மாத்தி போட்டுட்டான்(?) விடுங்க" என்று மன்னித்துவிட்டார் டி.ஆர். இந்த முருகனுக்கு டி.ஆர்.அன்பு காட்டிய விஷயத்தைதான் இப்போது சொல்லப்போகிறேன். இவர் திமுக வில் எம்.எல்.ஏ வாக இருந்த நேரம் அது. செங்கல்பட்டில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு அழைத்திருந்தார்கள் டி.ராஜேந்தரை. வழக்கமாக மாலை நேரத்தில் ரயில் பிடித்து செங்கல்பட்டு போய் இறங்கும் முருகன் அன்று, "அண்ணே... ஒங்களோட வேன்ல வந்து இறங்கிக்கிறேன்" என்று கூறியிருந்தார். "அதுக்கென்னடா சரி" என்று கூறிவிட்டார் இவரும். இவரது பிரச்சார வேனில் மேற்படி கோஷ்டிகள் ஏறிக்கொள்ள வண்டி கிளம்பியது. பயணத்தின்போது முருகனிடம், வீடு எங்கேயிருக்கு? செங்கல்பட்டிலிருந்து வீட்டுக்கு போக எவ்வளவு து£ரம்? எப்படி போவே? என்றெல்லாம் விசாரித்தபடியே சென்றார் டி.ஆர். வேன் செங்கல்பட்டை அடைந்தபோது இவருக்காக காத்திருந்த தொண்டர்கள் பெருத்த கோஷத்தை எழுப்பினார்கள். கூச்சல்களுக்கிடையே இவரிடம் சொல்லிவிட்டு போக கூட அவகாசம் இல்லாமல் கதவை திறந்து கொண்டு கீழே இறங்கிவிட்டார் முருகன். ஆனால் முருகன் இறங்கும்போது பஸ்சில் போக சொல்லி இருபது ரூபாயை அவரது கையில் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்த ராஜேந்தர் இந்த அமர்க்களத்தில் கொஞ்சம் தாமதிக்க, அதற்குள் சில அடி து£ரம் போய்விட்டார் முருகன். வெளியே வாழ்க கூச்சல் கேட்டுக் கொண்டிருக்க, வேனின் ஜன்னல் இடுக்கு வழியாக ஒரு இருபது ரூபாய் தாளை நீட்டியபடி, "யேய்... முருகா. இந்தா பணம். பஸ்சிலே போ. நடந்து போகாதே" என்று ஓங்கிக் குரல் கொடுத்துக்கொண்டிருந்தார் டி.ஆர். பிறகு அந்த கூட்டத்தில் முண்டியடித்து பணத்தை வாங்கிக் கொண்டார் முருகன். இப்போது சொந்த ஊரில் கவுன்சிலராக இருக்கிறார் நம்ம முருகன். சென்னைக்கு ஏதாவது வேலையாக வந்தால் கூட, "அண்ணனை ஒரு எட்டு பார்த்திட்டு போகலாம்னு வந்தேன்" என்று நமக்கும் ஒரு போன் அடிப்பார்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com